செகாமட்[ஜொகூர்], 01 ஜூலை 2025 : புக்கிட் துங்கால் தேசிய பள்ளியின் (Sekolah Kebangsaan Bukit Tunggal) டிஜிட்டல் பயிற்சி உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், RM33,500 நிதியுடன் ICT உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிகாமட் பாராளுமன்ற உறுப்பினர் திரு யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.
சமீபத்தில் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர்-ஆசிரியர் சங்க (PIBG) கூட்டத்தின் போது வழங்கப்பட்டது. கூட்டத்தின் போது, பள்ளித் தலைமை ஆசிரியர் மாட் யூசுப் அப்துல் ஹமீட் அவர்கள் முன்வைத்த கோரிக்கையை தொடர்ந்து, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக யுனேஸ்வரன் தெரிவித்தார்.
“பள்ளியின் தேவையை உணர்ந்து, நான் உடனடியாக RM33,500 நிதி ஒதுக்கினேன். இந்த உதவி, மாடனி அஸ்பிராசி அடிப்படையில், கல்வி துறையில் டிஜிட்டலாக்கத்தை முன்னேற்றும் தேசியக் கொள்கைக்கேற்ப வழங்கப்பட்டது,” என அவர் கூறினார்.
இந்த உபகரணங்கள் மூலம், ஆசிரியர்களும் மாணவர்களும் தொழில்நுட்பத்தில் சிறந்த பயன்பாடுகளை மேற்கொண்டு, பாரம்பரியக் கல்வியை டிஜிட்டல் வடிவுக்கு மாற்றும் செயல்பாடுகளில் முன்னேற முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“இது மாணவர்களின் கற்றல் தரத்தையும், தொழில்நுட்ப அறிவையும் உயர்த்தும் ஒரு நல்ல தொடக்கமாகும். எதிர்கால தலைமுறையை டிஜிட்டல் யுகத்திற்கு தயார்படுத்துவதே நமது நோக்கம்,” என்று அவர் முடிவில் கூறினார்.






