என் தமிழ்

மலேசியா, டிஜிட்டல் நாடாக மாறும் பாதையில் முன்னேறும் போது, மக்கள் மையமாக இருக்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங்

கோலாலம்பூர், 01 ஜூலை 2025 : “மக்கள் எப்போதும் நமது நாட்டின் டிஜிட்டல் முன்னேற்றத்தின் மையமாக இருக்க வேண்டும்” என டிஜிட்டல் அமைச்சரான கோபிந்த் சிங் தியோ தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற நிகழ்வில், CIMB நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இந்த முயற்சி புறக்கணிக்கப்படும் சமூகத்தினருக்கு ஒரு நல்ல துவக்கமாக இருக்கும் என்பதில் நம்பிக்கை தெரிவித்து, நிறுவத்திற்கு நன்றியையும் தெரிவித்தார்.

“இன்றைய டிஜிட்டல் யுகம் பெரும் வாய்ப்புகளை தரக்கூடியது. தரவு (Data) மற்றும் தானியங்கி நுண்ணறிவு (AI) ஆகியவற்றை விரைவாக ஏற்றுக்கொள்வது நமது பொது கடமையாக இருக்கிறது. யாரும் பிந்தியடையக் கூடாது,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

வளரும் டிஜிட்டல் நாட்டுக்காக சட்ட, நிறுவல் முயற்சிகள்

அவர் மேலும் கூறுகையில், மலேசிய மடானி அரசாங்கம் நாட்டை ஒரு முழுமையான டிஜிட்டல் வளாகமாக மாற்ற தீவிரம் காட்டி வருகிறது என்றும், 2023 முதல் தனது தலைமையில் செயல்பட்டு வரும் டிஜிட்டல் அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

இதில்:
சைபர் பாதுகாப்பு சட்டம் மற்றும் தரவு பகிர்வு சட்டம் உருவாக்கம்,
தேசிய தானியங்கி நுண்ணறிவு அலுவலகம் (NAIO) – 2024 டிசம்பரில் தொடக்கம்,
நான்காம் தொழிற் புரட்சி தேசிய கவுன்சில், மற்றும்
டிஜிட்டல் பொருளாதாரத் திட்டங்கள் அடங்கும்.

RM310.7 பில்லியன் முதலீடு – மையம் ஆகும் மலேசியா

அமைச்சர் கோபிந்த், 2021 முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில் மலேசியா RM310.7 பில்லியன் மதிப்பிலான டிஜிட்டல் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தெரிவித்தார். இதன்மூலம் மலேசியா தெற்காசியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் கட்டமைப்பின் முக்கிய மையமாக மாறிவருவதாகவும் அவர் கூறினார்.

பயிற்சிகள், உதவிகள், புதிய வாய்ப்புகள்

Malaysia Digital Economy Corporation (MDEC) போன்ற ஏஜென்சிகள் ஊடாக ‘eUsahawan’ உள்ளிட்ட திட்டங்கள் மூலம் புறநகர் மக்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

2025 ஏப்ரலில் அறிமுகமான Business Digitalisation Initiative (BDI)திட்டம் மூலம் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (PMKS) தேவையான திறன்கள், “freemium” டிஜிட்டல் தீர்வுகள், மற்றும் தனியார்-அரசுத் துறை கூட்டாண்மை போன்ற பல்வேறு ஆதரவுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக RM1.5 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் டிஜிட்டல் கல்வி – ஒரு நியாயமான இலக்கு

“டிஜிட்டல் மையமாக்கல் என்பது வளர்ச்சியின் அடிப்படைத் தூணாக உள்ளது. ஆனால் வளர்ச்சியில் யாரும் புறக்கணிக்கப்படக் கூடாது. சமூகப் பின்னணி, இடம், வயது எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு மலேசியருக்கும் இந்த பயணத்தில் பங்கு பெறும் வாய்ப்பும் உபகரணமும் வழங்கப்பட வேண்டும்,”என அமைச்சர் கோபிந்த் சிங் தியோ வலியுறுத்தினார்.

மலேசியாவை சக்திவாய்ந்த டிஜிட்டல் நாடாக மாற்ற அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

Scroll to Top