கிள்ளான், 02 ஜூலை 2025 : மலேசியா ஒருமைப்பாடு அமைச்சின் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, பாரம்பரிய இந்தியக் கலையை பாதுகாக்கும் நோக்குடன், இன்று இயல் இசை நாடகம் கலை அமைப்புக்கு நிதியுதவி வழங்கினார். இந்நிதியுதவி, அமைப்பின் வருடாந்தரக் கலை நிகழ்வுகளுக்கான துணையாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து, துணையமைச்சர் சரஸ்வதி கிளாங்கில் அமைந்துள்ள அமைப்பின் தலைவர் திரு அரசு அவர்களின் கலை ஸ்டுடியோவுக்கு விஜயம் செய்து, கலையமைப்பின் நடவடிக்கைகள் மற்றும் இளம் தலைமுறைக்கு வழங்கப்படும் கலைப்பயிற்சிகள் குறித்து பார்வையிட்டார்.
“இயல் இசை நாடகம் என்பது இந்திய சமூகத்தின் சிறப்பான பாரம்பரியக் கலைகளில் ஒன்றாகும். இது நமது பண்பாட்டு அடையாளமாகும் என்பதோடு, இக்கலை உருவாகும் புதிய தலைமுறையினரால் மறக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும். இக்கலையின் வளர்ச்சிக்கு எனது முழு ஆதரவும் இருக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிதியுதவி, பாரம்பரிய கலைகளை மேம்படுத்தும் வகையில் அரசாங்கம் வழங்கும் உறுதியின் சின்னமாகும். இது மலேசிய மடானி கொள்கையின் கீழ் கெம்பாரா பெர்படுவான் முயற்சியின் ஒரு பகுதியாக செயல்படுகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நவீன சமூக முன்னேற்றங்களுக்கிடையிலும், பாரம்பரிய கலைகளின் இருப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வலியுறுத்திய அவர், எதிர்கால சந்ததியினருக்கு இது ஒரு பெரும் வழிகாட்டியாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.





