என் தமிழ்

அமைதியான பேரணிக்கான சட்டம் – பிரிவு 9(5) செல்லாது என மத்திய நீதிமன்றம் அறிவித்தது மக்கள் குரலுக்கு கிடைத்த வெற்றி.

கோலாலம்பூர், 02 ஜூலை 2025 : பாஸ் துணை இயக்கத்தின் (DHPP) மத்திய தலைவர் திரு பாலசுப்ரமணியம் நாசியப்பன், JP இன்று வெளியிட்ட அறிக்கையில், 2012ஆம் ஆண்டுக்கான அமைதியான பேரணிக்கான சட்டத்தின் (Akta Perhimpunan Aman – APA) பிரிவு 9(5) செல்லாதது மற்றும் அரசியலமைப்புக்கு முரணானது என மத்திய நீதிமன்றம் தெரிவித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை மிகவும் மகிழ்வுடன் வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக வழங்கிய தீர்ப்பான ஐந்து நாட்கள் முன்னறிவிப்பு அளிக்கப்படாத காரணத்தால் ஒருவருக்கு அபராதம் விதிப்பது அரசியலமைப்பின் பிரிவு 10(1)(b)-இல் உள்ள அமைதியான, ஆயுதமில்லாத பேரணிக்கான உரிமைக்கு முரணானது என்பதை உறுதிப்படுத்துகிறது.

இந்த தீர்ப்பு, நாட்டில் நீதி நிலைபெற மக்களால் எழுப்பப்படும் குரலுக்கான வெற்றியாகும். இது நீதித்துறையின் நம்பிக்கையையும், அரசியலமைப்பில் உள்ள அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பையும் உறுதிப்படுத்துகிறது. சமூகத்தில் இருந்து வரும் அனைத்து குரல்களுக்கும் சட்டபூர்வமான உரிமை இருப்பதை இந்த தீர்ப்பு மீண்டும் வலியுறுத்துகிறது.

இத்தகைய நிலையில், அமைதியான முறையில் மக்களால் நடத்தப்படும் பேரணிகளை அடக்குவதற்காக அதிகாரங்களை தவறாக பயன்படுத்தாதிருப்பது அரசின் பொறுப்பாக இருக்க வேண்டும். சட்டத்தை அரசியலமைப்புக்கு இணங்க திருத்தும் நடவடிக்கைகள் அவசியமானவை. அதேபோல், பிரிவு 9(5) உடன் தொடர்புடைய வழக்குகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட வேண்டும் மற்றும் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் முழுமையாக திரும்பப் பெறப்பட வேண்டும்.

மேலும், DHPP, அமைதி பேரணி உரிமையை தொடர்ந்து உறுதியாக பாதுகாக்கும் என்பதுடன், கருத்து வேறுபாடுகளை மதித்து சமத்துவமான அணுகுமுறையை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. எனவும் ,திரு பாலசுப்ரமணியம் நாசியப்பன், JP , தலைவர் – பாஸ் துணை இயக்கம் – மத்திய குழு (DHPP) 02 ஜூலை 2025 வெளியிட்ட தனது செய்தியாளர் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

Scroll to Top