என் தமிழ்

வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர் : தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு டத்தோஸ்ரீ சரவணன் அறிவுரை – மாணவர் உதவிநிதிக்கு RM5,000 நன்கொடை

கோலாலம்பூர், 03 ஜூலை 2025 : “தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இப்போது அதிக வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த வாய்ப்புகளை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று ம.இ.கா தேசிய துணைத் தலைவர் மற்றும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் அறிவுரை வழங்கினார்.

கடந்த ஜூன் 22 ஞாயிற்றுக்கிழமை, பரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா இடைநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள இராமகிருஷ்ணா மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்ப்பள்ளி மாணவர் உதவிநிதி வாரியம் நடத்திய நேரடி கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழாவில் அவர் உரையாற்றினார்.

அவர் மேலும் கூறியதாவது:
“மாணவர்கள் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வதன் மூலம் கல்வியில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற முடியும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இதற்கான ஊக்கத்தை வழங்க வேண்டும்.”

இந்த போட்டியில் மத்திய மண்டலத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள்:

🥇ஆ. வர்ஷிகா ஆனந்தன் (காஜாங் வெஸ்ட் கண்ட்ரி தமிழ்ப்பள்ளி) – RM1,000 முதல் பரிசு

🥈விமோஷா தங்கமணி (சுங்கை பெலேக் தெலுக் மெர்பாவ் தமிழ்ப்பள்ளி) – RM700 இரண்டாம் பரிசு

🥉சிவப்பிரியா மேகராஜன் (பத்து ஆராங் தமிழ்ப்பள்ளி) – RM500 மூன்றாம் பரிசு

🏅ஐந்து மாணவர்கள் தலா RM100 ஆறுதல் பரிசு

வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை டத்தோஸ்ரீ சரவணன் வழங்கினார். மேலும், ஷா ஆலம் கல்லூரி மாணவர் ஜனார்த்தனன் பெரியசாமிக்கு RM600 கல்வி உதவிநிதி வழங்கப்பட்டது.

விவேகானந்தா ஆசிரமத்தின் சார்பில், அதன் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அம்பிகைபாகன், முதல் பரிசு பெற்ற மாணவியின் பள்ளிக்கு திறன் தொலைக்காட்சி ஒன்றையும் வழங்கினார்.

தமிழ்ப்பள்ளி மாணவர் உதவிநிதி வாரியத்திற்கு டத்தோஸ்ரீ சரவணன் RM5,000 நன்கொடையையும் வழங்கினார். இந்த நன்கொடையை வாரியத் தலைவர் வே. விவேகானந்தன் பெற்றுக் கொண்டார்.

வாரிய செயலாளர் கே. பத்மநாபன் நன்றியுரை நிகழ்த்த, அறங்காவலர் கே. ரகுநாதன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Scroll to Top