டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிமுக்கு இருந்த பாஸ் கட்சியின் ஆதரவும் நேற்றோடு கெஅடிலான் பக்கம் திரும்பிவிட்டதால், டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் தனது மந்திரி புசார் பதவி குறித்து வெளியூர் சென்றிருக்கும் சுல்தானிடம் மீண்டும் விவாதித்துள்ளார்.
அதன் படி தாம் வெளியூரிலிருந்து நாடு திரும்பும் வரை எந்தவொரு முடிவும் எடுக்காமல் தமக்காகக் காத்திருக்குமாறு சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா அறிவித்துள்ளார்.
முன்னதாக அறிக்கை ஒன்றில் சுல்தானின் அந்தரங்கச் செயலாளர் டத்தோ முகமது முனிர் பானி, டான் ஶ்ரீ காலிட் தமது பதவி குறித்தும், மாநிலத்தில் நிலவும் ஆகக் கடைசி நிலவரங்கள் குறித்தும் பேசுவதற்குக் கேட்டுக்கொண்டதாக அறிக்கை மூலம் தெரிவித்தார். அது குறித்து நான் சுல்தானிடம் முன்வைத்தேன்.
ஆனால், சுல்தான் அதனை நிராகரித்ததோடு, தாம் வெளிநாட்டிலிருந்து வரும் வரை காத்திருக்குமாறு தெரிவித்ததாக டத்தோ முகமது முனிர் பானி தெரிவித்தார்.
வெளிநாட்டிற்குச் சென்றுள்ள சுல்தான் எதிர்வரும் ஆகஸ்டு 27-ஆம் தேதி நாடு திரும்புவார் என்பது குறிப்பிடத்தக்கது.