கூச்சிங், 08/06/2025 : இந்த ஆண்டு நாடு முழுவதும் பல்வேறு நீர் விநியோகிப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக கடனாக, மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களுக்கு 79 கோடியே 64 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளது.
வெப்பமான வானிலை மற்றும் வறட்சியை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ள தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளில் இத்திட்டமும் அடங்கும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.
இவ்வாண்டு மே மாதம் வரை இம்முயற்சியின் கீழ் 28 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்று கம்போங் துபொங் ஜெயாவில் நடைபெற்ற தியாக சடங்கு நிகழ்ந்தியில் கலந்து கொண்டப் பின்னர், செய்தியாளர்களிடம் எரிசக்தி மாற்றம், நீர் உருமாற்ற அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் அவ்வாறு தெரிவித்தார்.
சபாவில் மொத்தம் 12 திட்டங்கள், கெடாவில் இரண்டு, கிளந்தானில் ஒன்று, பகாங்கில் மூன்று, திரெங்கானுவில் மூன்று, சரவாக்கில் ஐந்து மற்றும் பெர்லிஸில் இரு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
பல்வேறு கட்டங்களில் செயல்படுத்தப்படும் இத்திட்டங்களில் ஏழு இவ்வாண்டு நிறுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், NRW எனப்படும் உற்பத்தி செய்யப்படாத நீர் பிரச்சனைக்குத் தீர்வுக் காணும் முயற்சிகளில் தமது அமைச்சு தற்போது கவனம் செலுத்தி வருவதாக ஃபடில்லா குறிப்பிட்டார்.





