என் தமிழ்

591.39 கிலோ கிராம் போதைப் பொருள் கடத்தல்; இரு ஆடவர் மீது குற்றச்சாட்டு

கோலா திரெங்கானு, 07/05/2025 : கடந்த மாதம், செத்தியூ சுற்றுவட்டாரப் பகுதியில் 591.39 கிலோ கிராம் எடையிலான Methamphetamine மற்றும் Heroin ரக போதைப் பொருளை விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில், இரு ஆண்கள் இன்று கோலா திரெங்கானு செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட 32 வயதான நிக் கைரில் ஷாருசி நிக் ரொஸ்லான் மற்றும் 38 வயதான முஹமட் ரெடுவான் மியோர் ஹுசேன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு, நீதிபதி முஹமட் சுல் சக்கிகுடின் சுல்கிஃபிலி முன்னிலையில் வாசிக்கப்பட்டது.

இருப்பினும், இவ்வழக்கு உயர்நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பதால், அவர்களிடமிருந்து வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றம் சாட்டப்பட்ட அவ்விருவருடன் இவ்வழக்கில் தேடப்படும் மற்றோர் ஆடவரும் இணைந்து, கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி இரவு மணி 9-க்கு, சுங்கை செத்தியூ அருகே, 480.38 கிலோ கிராம் Methamphetamine மற்றும் 109.89 கிலோ கிராம் Heroin போதைப் பொருளை விநியோகித்ததாக அவர்கள் மீது முதல் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

இதனிடையே, அதே நாள் இரவு மணி 10-க்கு, சுங்கை செத்தியூவில் உள்ள பூலாவ் தொக் பிலால் ஓரத்தில், 1.2 கிலோ கிராம் எடையிலான Methamphetamine போதைப் பொருளை விநியோகித்ததாக முஹமட் ரெடுவான் மீது மற்றொரு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டம் செக்‌ஷன் 39B(1)(a) மற்றும் அதே குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 34 ஆகியவற்றின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதால், குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரணத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

ஒருவேளை, மரணத் தண்டனை விதிக்கப்படாவிட்டால் 15-க்கும் குறையாத பிரம்படியும் வழங்கப்படும்.

இவ்வழக்கை மீண்டும் செத்தியூ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு ஆகஸ்ட் மூன்றாம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

Source : Bernama

#CrimeNews
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Scroll to Top