புத்ரா ஹைட்ஸ்; எரிவாயு குழாயை அகற்றும் பணி இன்னும் ஒரு வாரம் வரை நீடிக்கும்
புத்ரா ஹைட்ஸ், 30/04/2025 : சிலாங்கூர், புத்ரா ஹைட்சில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணை ஒரு வாரத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட குழாயின் 16 மீட்டர் பகுதி இதுவரை அகற்றப்பட்டிருக்கும் நிலையில், மீதமுள்ள நான்கு முதல் ஐந்து மீட்டர் வரையிலான குழாயை விசாரணைக் குழு கூடிய விரைவில் அகற்றும் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் ஒமார் கான் கூறினார்.
“குழாய் வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணை இன்னும் ஒரு வாரத்திற்குள் நிறைவடையும் என்று நான் நம்புகிறேன். கடைசி பாகத்தை அகற்ற வேண்டும். எனவே, சம்பவ இடத்திற்கான விசாரணையை இன்னும் ஒரு வாரத்திற்குள் ஜே.கே.கே.பி நிறைவு செய்துவிடும். மாதிரியை ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும். அதனை ஆய்வு செய்ய சிரிமின் உதவி தேவைப்படும். அதோடு, வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணத்தை முடிவுக்குக் கொண்டு வர இன்னும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்”, என்று அவர் கூறினார்.
குழாய்கள் அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்ட பிறகு, மறுசீரமைப்பு பணிகளுக்காக சம்பவம் நிகழ்ந்த பகுதி பெட்ரோனாஸிடம் ஒப்படைக்கப்படும் என்று டத்தோ உசேன் கூறினார்.
“ஒரு வாரத்திற்குப் பிறகு, மறுசீரமைப்பு பணிகளுக்காக அந்த இடம் பெட்ரோனாசிடம் ஒப்படைக்கப்படும். குழாய் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு எரிவாயு குழாய் பயன்பாட்டைத் தொடர பெட்ரோனாசுக்கு சில மாதங்கள் ஆகலாம்”, என்றார் அவர்.
அரச மலேசிய போலீஸ் படை, பிடிஆர்எம், பெட்ரோனாஸ் மற்றும் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை ஆகியோர் சம்பவ இடத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நேரில் காண, முன்னதாக 30 ஊடகவியலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
Source : Bernama
#PDRM
#PetronasGasPipelineAccident
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews