போதிய பயிற்சியின்றி விமானம் ஓட்டிய 13 கோ ஏர் விமானிகள் நிறுத்திவைப்பு

போதிய பயிற்சியின்றி விமானம் ஓட்டிய 13 கோ ஏர் விமானிகள் நிறுத்திவைப்பு

07indigo6

தேவையான பயிற்சிகளைப் பெறாமல் இந்தியாவின் குறைந்த கட்டண விமானமான ‘கோ’ ஏர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 13 விமானிகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) நிறுத்தி வைத்துள்ளது.

அதுமட்டுமின்றி இந்நிறுவனத்தின் தலைமைப் பயிற்சியாளரையும் இடைநீக்கம் செய்துள்ள டிஜிசிஏ இவர்களை நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்வது குறித்த விளக்கக் கடிதத்தினையும் கோஏர் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டில் இந்த 13 விமானிகளும் முழுமையான பயிற்சிகளை முடிக்காத நிலையில் கோ ஏர் நிறுவனத்தில் பணி புரிவது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

இந்த ஆண்டு மீண்டும் அதே குறைவான பயிற்சியுடன் இவர்கள் மீண்டும் விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் இந்த விமானிகளுடன் அந்நிறுவனத்தின் தலைமைப் பயிற்சியாளரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டிஜிசிஏ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கோ ஏர் நிறுவனத்தின் முக்கிய நிர்வாக அதிகாரி ஜார்ஜியோ டி ரோனி தங்களுடைய நிலையை விளக்குவதற்காக டிஜிசிஏவின் உயர் அதிகாரக் குழு கூட்டம் ஒன்றிற்கு முயன்று வருகின்றார் என்று கூறப்பட்டுள்ளது. தங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வந்ததை உறுதி செய்த கோஏர் நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர் இதுகுறித்த விளக்கம் ஒன்று ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது என்றும், இப்பொழுதும் தங்கள் நிலையை அதிகாரிகளிடம் தெளிவாக்க முடியும் என்ற நம்பிக்கை தங்களிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.