என் தமிழ்

கிளந்தான் குற்றச்செயல்கள் அதிகரிப்பு; அமைச்சுடன் போலீஸ் ஒத்துழைப்பு

புத்ராஜெயா, 25/04/2025 : கிளந்தான் மாநிலத்தில் நிகழும் பாலியல் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் அதிகரிப்பு குறித்த தகவல்களைப் பெற மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம்-உடன் இணைந்து செயல்படுகிறது.

எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு முன்னர், குறிப்பு மற்றும் மதிப்பாய்வாகப் பயன்படுத்த போலீஸ் தரப்பினரால் வெளியிடப்பட்ட தகவல்களை அது அடிப்படையாக கொண்டிருக்கும் என்று அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி கூறினார்.

கிளந்தான் மாநிலம் மீது தவறான பார்வையை அம்மாநில போலீசார் ஏற்படுத்த முயற்சிப்பதாக, மெலோர் மாநில சட்டமன்ற உறுப்பினர் வான் ரொஹிமி வான் டவுட் வெளியிட்ட கூற்றுக்கு நேன்சி ஷுக்ரி இவ்வாறு கருத்துரைத்தார்.

“ஏனென்றால் நாங்கள் வெளியிடுவது தரவுகளின் அடிப்படையில் விசாரிக்கப்பட்ட வழக்குகள். விசாரிக்கப்படாத வழக்குகளும் உள்ளன. எனவே, நாங்கள் அதனை தரவுகளில் இணைக்க மாட்டோம். இந்த சட்டமன்ற உறுப்பினரைப் பொறுத்தவரை நமக்கு சிலநேரங்களில் தெரியாது. ஏனென்றால், அது அன்றாட விவகாரமல்ல. எனவே, போலீசாரிடமிருந்து சரியான தரவுகளைப் பெறுவது அவசியம். அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்கிறார்கள். உண்மையான நிலைமையைக் கண்டறிய அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும்,” என்றார் அவர்.

உண்மை நிலையைக் கண்டறிய, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உட்பட அனைத்து கட்சிகளும் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று நேன்சி வலியுறுத்தினார்.

இன்று நடைபெற்ற மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.

Source : Bernama

#CrimeNews
#Kilantan
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Scroll to Top