மண்ணை விட்டு மறைந்தார் மனித மூலதன மேம்பாட்டு தந்தை

மண்ணை விட்டு மறைந்தார் மனித மூலதன மேம்பாட்டு தந்தை

கோலாலம்பூர், 15/04/2025 : மலேசியாவில் மனித மூலதன மேம்பாட்டில் அதிகம் பங்களித்து மனித மூலதன மேம்பாட்டு தந்தை என்று அங்கீகரிக்கப்பட்ட ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லா அஹ்மட் படாவி நேற்று காலமானார்.

“Pak Lah” என்று அழைக்கப்படும் 85 வயதுடைய அவர், வருங்கால சந்ததியினரின் சிறந்த அடித்தளமாக மனித மூலதன அம்சத்தை வலியுறுத்துவதில் ஒரு முன்னோடியாக இருந்தார்.

சிறந்த நாட்டை மேம்படுத்துவதில் கல்வி, ஒழுக்கம் மற்றும் கட்டொழுங்கு போன்ற நேர்மறை அம்சங்களை துன் அப்துல்லா படாவி வலியுறுத்தினார்.

2003-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி தொடங்கி ஆறு ஆண்டுகளாக நாட்டை நிர்வகித்த அவர், தேசிய இலக்கு, தேசிய ஒருமைப்பாட்டு திட்டம், பொருளாதார மண்டலம், மனித மூலதன மேம்பாடு மற்றும் இஸ்லாம் ஹட்ஹரி உட்பட ஐந்து முதன்மை அடிப்படை கூறுகளை வகுத்தார்.

1939ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி பினாங்கு பாயான் லெப்பாசில் பிறந்த துன் அப்துல்லா அம்மாநிலம் முழுவதிலும் உள்ள சில பள்ளிகளில் தமது தொடக்க மற்றும் இடைநிலை கல்வியைக் கற்றார்.

பின்னர், மலாயாப் பல்கலைக்கழகத்தில் 1962 தொடங்கி 1964-ஆம் ஆண்டு வரை இஸ்லாமியக் கல்வி துறையில் தமது பட்டப்படிப்பைத் தொடர்ந்து ஆசிரியராக பணியாற்றினார்.

1965-ஆம் ஆண்டு என்டோன் மாஹ்முட்டை திருமணம் புரிந்தார்.

அவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

2005-ஆம் ஆண்டு என்டோன் மரணமடைந்த பின்னர், 2007-ஆம் ஆண்டு ஜேனே அப்துல்லாவை திருமணம் புரிந்தார்.

1964-ஆம் ஆண்டு துணை செயலாளராக தனது தொழிலைத் தொடங்கிய துன் அப்துல்லா, 1965-ஆம் ஆண்டில் அம்னோவில் இணைந்தார்.

1978-ஆம் ஆண்டு கப்பாளா பத்தாஸ் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றப் பின்னர் அரசியல் வாழ்க்கையில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார்.

கல்வி, தற்காப்பு, வெளியுறவு அமைச்சர் பதவிகள், துணைப் பிரதமர், உள்துறை அமைச்சர் பதவி உட்பட அமைச்சரவையில் சில முக்கியப் பதவிகளை வகித்தார்.

துன் டாக்டர் மகாதீர் தமது அனைத்து பதவிகளிலும் இருந்து விலகியப் பின்னர், 2000 தொடங்கி 2003-ஆம் ஆண்டு வரை அம்னோ துணை தலைவர், 2003 தொடங்கி 2009-ஆம் ஆண்டு வரை அம்னோ தலைவர் பதவிளை அவர் வகித்தார்.

2009-ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி பிரதமர் பதவியில் இருந்து விலகியப் பின்னர் அவருக்கு துன் பதவி வழங்கப்பட்டது.

Source : Bernama

#AbdullahAhmadBadawi

#PakLah
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews