மாரான், 11/04/2025 : தைப்பூசம், திருக்கார்த்திகைக்கு அடுத்தபடியாக தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமான் தெய்வானையை கரம் பிடித்த நாளாக அறியப்படும் பங்குனி உத்திரத் திருவிழாவிற்கும் தனிச் சிறப்பு உண்டு.
பல கந்தன் சன்னிதானங்களில் இன்று இந்தத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தாலும் நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய முருகன் ஆலயமான பகாங், மாரான் SRI மரத்தாண்டவர் ஆலயமே இதற்கு பிரசித்திப் பெற்ற வழிபாட்டுத் தலமாகும்.
நூற்றாண்டு பழைமையான இவ்வாலயத்தில் இன்று கொண்டாடப்படும் 94-ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவின் நேற்றைய நிலவரங்களை பெர்னாமா தமிழ்ச்செய்தி நேரில் சென்று கண்டறிந்தது.
திருவிழாவை முன்னிட்டு இம்மாதம் முதலாம் தேதியே ஆலயத்தில் கொடியேற்றப்பட்டு பத்து நாட்களுக்கு பங்குனி உத்திர சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
அதன் கடைசி நாளான நேற்று மாலை தொடங்கியே பக்தர்களும் பாத யாத்திரை மேற்கொண்டு ஆலயத்தை வந்தடைந்தவர்களும் அங்கு நிரம்பத் தொடங்கினர்.
தொண்டூழியர்கள் மற்றும் பக்தர்களின் ஆதரவோடு இவ்வாண்டும் பங்குனி உத்திரத் திருவிழா, பல்வேறு அம்சங்களுடன் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளதாக ஆலயத் தலைவர் ராமன் பழனியப்பன் கூறினார்.
“இவ்வாண்டு பக்தர்களின் இலகுத் தன்மைக்கு ஏற்ப ஆலயத்தில் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பங்குனி உத்திரத் திருவிழாவிற்கு பல சிறப்பு பூஜைகள் நடைபெறுவதோடு, பக்தர்கள் தங்கு தடையின்றி தங்களின் நேர்த்திக் கடனை செய்வதற்கான வசதிகளும் தயார் செய்யப்பட்டுள்ளன,” என்று ராமன் தெரிவித்தார்.
இன்று தான் பங்குனி உத்திரத் திருவிழா என்றாலும், கடந்த ஒரு வார காலமாகவே ஆயிக்கரணக்கான பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனை ஆலயத்தில் நிறைவேற்றத் தொடங்கிவிட்டனர்.
அதிலும் நேற்று அதிகமான பக்தர்கள் காவடி, பால்குடம், அங்கப்பிரதட்சணம் செய்யத் தொடங்கி இருந்ததையும் காண முடிந்தது.
ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகள், குறிப்பாக 30 ஏக்கர் நிலப்பரப்பு அளவிலான கார் நிறுத்துமிடம், நூற்றுக்கும் மேலான குளியல் அறை மற்றும் கழிப்பறை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மேலும், ஆலயத்திற்கு அருகில் இருந்த பெரிய மண்டபத்தில் பக்தர்கள் தற்காலிகமாக தங்குவதற்கான இடவசதி, ஆலயத்தைச் சுற்றிலும் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு உடனுக்குடன் அது அப்புறப்படுத்தப்பட்டும் வந்தது.
ஒவ்வொரு ஆண்டையும் போல, ஆலய வளாகத்தைச் சுற்றிலும் சுமார் 150-க்கும் மேற்பட்ட சிறிய கடைகளும் போடப்பட்டிருந்தன.
அதேவேளையில், 300 போலீசாரும் 50-க்கும் மேற்பட்ட ரேலா தொண்டூழியப் பணியாளர்களும் கடமையாற்றி வருகின்றனர்.
இரவு எட்டு மணிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைக்குப் பின்னர், முருகப் பெருமான் ராஜ அலங்காரத்தில் ஆலயத்தின் உள்வீதியில் ரத ஊர்வலமாக பவனி வந்தார்.
பின்னிரவு மணி 2.15-க்கு தொடங்கிய மகா அபிஷேகத்திற்குப் பின்னர் ஆலயத்தின் பங்குனி உத்திரத் திருவிழா, உறுமி மற்றும் மேளதாள இசை வாத்தியங்கள் முழங்க இனிதே தொடங்கியது.
Source : Bernama
#MaaraanMarathandavar
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews