உலக புவியியலாளர் தினம்

உலக புவியியலாளர் தினம்

கோலாலம்பூர், 06/04/2025 : இயற்கை வளங்களான கனிமங்கள், நீர் மற்றும் நிலங்களை ஆய்வு செய்வதுடன் புவி மண்டலத்தின் பரிணாம வளர்ச்சிகளைப் புரிந்துக் கொண்டு மனிதர்களின் வாழ்க்கை முறைக்கு மகத்தான பங்களிப்பை வழங்குவதில் புவியியலாளர்கள் முதன்மை வகிக்கின்றனர்.

அவர்களின் பங்களிப்பைப் போற்றும் விதமாக, 1966-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் உலக புவியியலாளர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

பூமியின் இரகசியங்களை ஆராய்ந்து, இயற்கை அர்புதங்களைத் தெளிவுப்படுத்தும் புவியலாளர்கள் தொடர்பான சிறப்பு செய்தி தொடர்ந்து இடம்பெறுகின்றது.

மனிதனுக்கும் இயற்கை வளங்களுக்கும் இடையிலான தொடர்புகள், காலநிலை, தாவரங்கள், விலங்குகள் அதன் சூழல்கள் மற்றும் தாக்கங்களை இணைக்கும் புவி குறித்த ஆராய்வுகளே புவியியலாளர்களின் உலகமாகின்றது.

மருத்துவம், விஞ்ஞானம், சட்டம், ஆசிரியர் போன்ற துறைகளுக்கு மத்தியில் பூமியின் மாற்றங்கள், கடல் புவியியல், இயற்கை பேரழிவுகள் போன்ற ஆய்வுகளுக்கு வழிவகுக்கும் புவியியல் துறையை மாணவர்கள் தேர்வு செய்வது மிகவும் அரிதாகவே உள்ளது.

எனினும், மலேசியாவைப் பொருத்தவரை புவியியல் கல்வி மிகவும் அவசியம் என்று வலியுறுத்துகின்றார், மலேசிய திரெங்கானு பல்கலைக்கழகத்தில் கடல்சார் புவியியல் அறிவியல் துறையில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்கும் மாணவி பிரியங்கா பழனிவேலு.

“மலேசியாவில் புவியியல் ஒரு அவசியமான துறையாக உள்ளது. ஏனெனில், இது இயற்கை பேரழிவுகளைப் புரிந்து கொள்வதற்கும், வளங்களை மேலாண்மை செய்வதற்கும் உதவுகிறது. சமீபத்தில், நில அமிழ்வு, நிலநடுக்கங்கள் போன்ற சம்பவங்கள் நாட்டில் நிகழ்ந்துள்ளன. இது மண்ணின் இயல்பு, நிலச்சரிவு அபாயங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்வதன் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றது”, என்று அவர் கூறினார்.

மலேசியா, எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களால் செழிப்பான நாடு என்பதால் புவியியல் பொருளாதாரத்திற்கு முக்கியப் பங்கு வகிப்பதாக, அவர் கூறினார்.

இத்துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்வதன் மூலம் வேலை வாய்ப்புகளைப் பெறுவதில் சிக்கலை எதிர்கொள்வதாக நினைத்திருக்கும் மாணவர்களுக்கு, அதன் வேலை வாய்ப்புகள் குறித்து பிரியங்கா இவ்வாறு விளக்கினார்.

“உதாரணத்திற்கு, Petroleum Geologist எண்ணெய் எரிவாயு தேடலுதல் மற்றும் உற்பத்தியில் பணியாற்ற, Engeneering Geologist கட்டிட பணிகளுக்கான நிலத்தை ஆய்வு செய்ய, Environmental Geologist சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களை மேலாண்மை செய்ய உதவுகின்றது. அதுமட்டுமின்றி, Geophysical பூமியின் இயக்கங்களை ஆராய, Hydrogeologist நிலத்தடி நீரை ஆய்வு செய்ய, Geochemist பாறைகள் மற்றும் கனிமங்களின் வேதியல் அம்சங்களைப் பகுப்பாய்வு செய்யும்”, என்றார் அவர்.

அதோடு, புவியியல் தொடர்புடைய துறைகள் எதிர்காலத்தில் நாட்டிற்கு அதிகம் தேவைப்படும் என்பதால் மாணவர்களும் பெற்றோர்களும் அத்துறை குறித்து நன்கறிந்துக் கொள்ள வேண்டும் என்று பிரியங்கா வலியுறுத்தினார்.

“ஆனால், சுற்றுச்சூழல் மாற்றங்கள், இயற்கை பேரழிவுகள், வளம் மேலாண்மை ஆகியவை இப்பொழுது ஒரு முக்கியமானவை. புவியியல் உள்ளிட்ட தொடர்புடைய துறைகள் எதிர்காலத்தில் அதிகம் தேவைப்படவுள்ளன. எனவே, மாணவர்களும் பெற்றோர்களும் புதிய துறைகளை விரிவாக ஆராய்ந்து, இதன் முக்கியத்துவத்தைப் புரிந்துக் கொள்ள வேண்டும்”, என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, புவியியல் துறை குறித்த விழிப்புணர்வு, இன்றைய பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் எவ்வாறு உள்ளது என்பது குறித்த கருத்தையும் பெர்னாமா செய்திகள் கேட்டறிந்தது.

“புவியியல் துறை நிறைய பல்கலைக்கழகங்களில் இருப்பது எனக்கு தெரியும். ஏனென்றால், நாங்கள் யூ.பி.யூ விண்ணப்பம் செய்யும்போது அதற்கான ஒரு தேர்வு இருந்தது. அது படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்ததா என்று கேட்டால், எனக்கு வேறு துறையில் ஆர்வம் அதிகம் இருந்ததால் நான் புவியியலைத் தேர்வு செய்யவில்லை”, என்று வடமலேசிய பல்கலைக்கழக மாணவி விஷாலினி வியாசர் கூறினார்.

“நிறைய மாணவர்களுக்கு இத்துறை இருப்பது தெரியவில்லை. ஏனென்றால், சமூகத்தில் அது குறித்த விழிப்புணர்வு குறைவாக இருக்கின்றது. மலேசிய சபா பல்கலைக்கழகத்தில் அத்துறையை வழங்குகின்றனர். யாருக்கெல்லாம் அத்துறையைப் படிக்க ஆர்வம் உள்ளதோ அவர்கள் படிக்கலாம். இத்துறை சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் என்று நான் பெரிதும் நம்புகின்றேன்”, என்றார் மலேசிய சபா பல்கலைக்கழக மாணவன் ஜீவானந்த் ஆனந்தன்.

இதுபோன்ற துறைகளை இந்திய மாணவர்கள் தேர்வு செய்து படிக்கும் போது, வரும் காலத்தில் வேலை வாய்ப்பும் அவர்களுக்கு இதில் பிரகாசமாக இருக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

பூமியையும் அதனை ஆய்வு செய்யும் புவியியலாளர்களையும் ஊக்குவிப்பதோடு புவி சார்ந்து தகவல் அறிந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்நாள் அனுசரிக்கப்படுகின்றது.

Source : Bernama

#WorldGeologistDay
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews