கோலாலம்பூர், 03/04/2025 : எரிவாயு குழாய்களில் ஏற்படும் வெடிப்பு அல்லது கசிவுகள், இயற்கைக்கும், மனிதர்களின் பாதுகாப்பிற்கும் சில பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது.
குழாய்களிலிருந்து வெளியேறும் இரசாயன வாயு, இயற்கையில் சில மாசுப்படுகளை ஏற்படுத்துவதுடன் மக்களின் நலனிற்குப் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றது.
இந்நிலையில், சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்சில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக, புவியியல் ரீதியில் சில ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் புவியியலாளர் நிக்கோலஸ் ஜேக்கப்.
பொதுவாகவே, எரிவாயு குழாய்கள் கரையோர பகுதிகளில் அமைக்கப்பட்டிருப்பதாக மக்கள் நினைத்திருப்பர்.
ஆனால், எதிர்பாரா விதமாக வீடமைப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த எரிவாயு குழாயின் வெடிப்பு, மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதுடன் பல பொருள் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் எவ்வித அச்சங்களும் குழப்பங்களுமின்றி மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப சம்பந்தப்பட்ட தரப்பினர் சில செயல்பாட்டு விதிமுறைகளை அமைக்க வேண்டும் என்று புவியியலாளர் நிக்கோலஸ் ஜேக்கப் கூறினார்.
“குழு ஒன்றை அமைத்து செயல்பாட்டு விதிமுறைகளை உருவாக்கி கருத்துகளைச் சேகரிக்க வேண்டும். ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற சம்பங்கள் மீண்டும் நடக்காது என்று. அப்பொழுதுதான் மக்களுக்குத் திருப்தியாக இருக்கும், மீண்டும் அங்கு சென்று தங்குவதற்கு”, என்றார் அவர்.
எரிவாயு குழாய் அமைக்கப்பட்டிருக்கும் பகுதியைச் சுற்றிலும், திட்ட மேம்பாட்டிற்கான வழிகாட்டல்களைக் கட்டாயம் அமைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அதோடு, எரிவாயு குழாய் கசிவின் மூலம் அப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் மாசுபாடுகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மலேசிய கனிம மற்றும் புவி அறிவியல் துறையின் முன்னாள் இயக்குநருமான நிக்கோலஸ் கூறினார்.
“எரிவாயு குழாய் வெடிப்பினால் நிறைய இயற்கை மாசுப்பாடுகள் நிகழ்ந்திருக்கும். காற்று தூய்மைக்கேடு, நில தூய்மைக்கேடு, நீர் தூய்மைக்கேடு போன்ற பிரச்சனைகள் நடந்திருக்கலாம். ஆக, அவை அனைத்தையும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அந்த கசிவு நிலத்திற்குச் சென்று, பூமிக்கு அடியில் உள்ள நீரில் கலக்கும். பூமிக்கு அடியில் உள்ள நீரில் கலப்பது மிகப் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே, அதனை ஆராய்ச்சி செய்ய வேண்டும்”, என்று அவர் கூறினார்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட தரப்பினர் முறையான ஆய்வுகளை மேற்கொள்ளும் வரை அப்பகுதி மக்கள் காத்திருக்க வேண்டும் என்று நிக்கோலஸ் குறிப்பிட்டார்.
“ஆக, நாம் காத்திருக்க வேண்டும். சிறிது காலம் எடுத்து ஆய்வுகளை மேற்கொண்டு அது பாதுக்காப்பான இடம் என்று உறுதிப்படுத்திய பிறகு மக்கள் அப்பகுதியில் பாதுக்காப்பாக சென்று வசிக்கலாம். மக்கள் மன அமைதியுடன் இருக்கலாம், இரவில் தூங்கினால் நன்றாக தூங்க முடியும். இல்லையென்றால், மன அழுத்தம் ஏற்பட்டு மற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அதுவே அவர்களுக்குப் பயமாக மாறிவிடும்”, என்று அவர் தெரிவித்தார்.
யாரும் எதிர்பாரா நேரத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்திலிருந்து மீண்டு வர, அப்பகுதி மக்களுக்கு நிச்சயம் சில கால அவகாசம் தேவைப்படும் என்று, இன்று பெர்னாமா தொடர்புக் கொண்டபோது நிக்கோலஸ் ஜேக்கப் கூறினார்.
Source : Bernama
#PetronasGasPipelineAccident
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews