புத்ரா ஹைட்ஸ், 02/04/2025 : சிலாங்கூர், சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் குடியிருப்புப் பிரச்சனையைக் கையாள வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு, கேபிகேடி தகுந்த மற்றும் ஆக்கப்பூர்வமான வழிமுறைகளை ஆராயும்.
இச்சம்பவத்தில் தங்களின் வீடுகளை இழந்தவர்களுக்கு உதவ மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம் மற்றும் பெட்ரோனாசிற்கு இடையில் ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் எனும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் வலியுறுத்தலை தங்கள் தரப்பு வரவேற்பதாக அதன் அமைச்சர் ஙா கோர் மெங் தெரிவித்தார்.
சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதோடு, தேவைப்படும் உதவிகளை ஒருங்கிணைக்க கேபிகேடி சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை மேற்கொள்ள தயாராக இருப்பதாக ஙா கூறினார்.
வீடுகளை இழந்தவர்கள் தற்போது பூச்சோங், நூருல் இமான் பள்ளிவாசலிலும் தற்காலிக நிவாரண மையமாக பயன்படுத்தப்படும் புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலின் பல்நோக்கு மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சேதமடைந்த வீடுகளைச் சரிசெய்யவும் புதிய வீடுகளைக் கட்டும் பணிகளுக்கும் கால அவகாசம் எடுக்கும் என்று குறிப்பிட்ட அவர், அதற்கான செயல்முறையை விரைவுப்படுத்த கேபிகேடி ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்.
தங்களின் வீடுகளை மீண்டும் கட்டுவதில் அல்லது மறுசீரமைக்கும் செயல்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான ஆதரவு வழங்கப்படுவதை உறுதி செய்வதிலேயே தற்போது முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் ஙா விவரித்தார்
Source : Bernama
#PetronasGasPipelineAccident
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews