கோலாலம்பூர், 27/03/2025 : நோன்புப் பெருநாள் விடுமுறையை முன்னிட்டு நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் தினசரி பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 70-ஆயிரமாக அதிகரிக்கும் என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியம், எல்எல்எம் கணித்துள்ளது.
அந்த எண்ணிக்கையில், 21 லட்சம் வாகனங்கள் பிளஸ் குழுமத்தின் கீழ் உள்ள நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் என்று இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் எல்எல்எம் தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து, கேஎல் – காராக் நெடுஞ்சாலையில் இரண்டு லட்சத்து 16,000 வாகனங்கள், மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையில் ஒரு லட்சத்து 76,000 வாகனங்கள், எல்பிடி 1 எனப்படும் முதலாவது கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலையில் ஒரு லட்சத்து 56,000 வாகனங்கள் பயணிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ள வேளையில், எல்பிடி 2-இல் 70,000 வாகனங்கள் பயணிக்கும் என்று அவ்வறிக்கை கூறுகின்றது.
ஏப்ரல் 2 தொடங்கி ஏப்ரல் நான்காம் தேதி வரை கூடுதல் பள்ளி விடுமுறையை கல்வி அமைச்சு அறிவித்ததைத் தொடர்ந்து, கோலாலம்பூரிலிருந்து நாட்டின் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு கடற்கரையை நோக்கி பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை இன்று தொடங்கி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 5 மற்றும் 6-ஆம் தேதி தொடங்கி கோலாலம்பூருக்கு திரும்பும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அவ்வாரியம் தெரிவித்தது.
இக்காலக்கட்டத்தில் நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக, அவசரப் பணிகளைத் தவிர, மார்ச் 24 தொடங்கி ஏப்ரல் ஏழாம் தேதி வரையில் நெடுஞ்சாலை வழித்தடங்கள் எதுவும் மூடப்படாது உட்பட எல்எல்எம் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.
Source : Bernama
#TrafficCongestion
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews