நாட்டுப்பற்றை வலுப்படுத்த மாணவர் சீருடையில் ‘ஜாலூர் கெமிலாங்’ சின்னம்

நாட்டுப்பற்றை வலுப்படுத்த மாணவர் சீருடையில் 'ஜாலூர் கெமிலாங்' சின்னம்

கோலாலம்பூர், 27/03/2025 : தனது நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கல்விக் கழகங்களில் பயிலும் மாணவர் சீருடையில் ஜாலூர் கெமிலாங் சின்னம் அணியப்படுவதை வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கி கட்டம் கட்டமாக கல்வி அமைச்சு அமல்படுத்தும்.

அனைத்து அரசாங்கப் பள்ளிகள், அரசாங்க உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் கல்லூரிகள் உட்பட மலேசிய ஆசிரியர் கல்விக் கழகம் ஆகியவற்றை உள்ளடக்கிய மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே நாட்டுப்பற்றையும் நாட்டின் மீதான அன்பையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாக,இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அமைச்சு கூறியது.

இளைய தலைமுறையினரிடையே நாட்டின் மீது அன்பை ஏற்படுத்தவும் நாட்டுப்பற்றை வளர்க்கவும் கல்வி கழகங்களின் செயல்பாட்டிற்கு ஏற்ப இம்முயற்சி அமைவதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025/2026 கல்வி ஆண்டில் பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் ‘ஜாலூர் கெமிலாங்’-இன் இரு சின்னங்களை இலவசமாக வழங்கவிருப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

கல்வி அமைச்சின் கீழ் உள்ள கல்விக் கழகங்களில் பயிலும் மாணவர் சீருடையில் ‘ஜாலூர் கெமிலாங்’ சின்னத்தை அணிவதற்கான வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய சிறப்பு சுற்றறிக்கையையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

Source : Bernama

#JalurGemilang
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews