கோலாலம்பூர், 24/03/2025 : இவ்வாண்டு மே முதலாம் தேதி தொடங்கி தனியார் மருத்துவமனைகளும் சிகிச்சையகங்களும் மருந்து விலைப்பட்டியலை பொது நிலையில் வைக்கும் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது.
மருந்துகளின் விலைகள் குறித்தத் தகவல்களையும், தேர்வு செய்யும் உரிமையைப் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளும் நோக்கில், இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இருப்பினும், இந்த உத்தரவு சட்ட ரீதியில் சரியானதா ?
அது குறித்து விளக்குகின்றார் வழக்கறிஞர் சரவணன் மெய்யப்பன்.
பொதுவில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள், குறிப்பாக மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம், இந்த உத்தரவை விதிக்கவில்லை.
மாறாக, பயனீட்டாளர்களின் உலகளாவிய உரிமைகளுக்கு ஏற்ப அதன் கட்டணங்களின் வெளிப்படைத்தன்மையை உறுதிச் செய்ய அமல்படுத்தவிருப்பதாக வழக்கறிஞர் சரவணன் மெய்யப்பன் கூறினார்.
”அதன் விலை ஏன் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்றால், இது உலகளாவிய பயனீட்டாளர்களின் உரிமை. ஒரு பயனீட்டாளராக இருக்கும் பட்சத்தில், வாங்கும் பொருட்களுக்கான விலை மற்றும் தகவல்களைத் தெரிந்திருக்க வேண்டும்”, என்று அவர் கூறினார்.
அதுமட்டுமின்றி, மருந்துகளின் விலை மற்றும் சுகாதார வசதிகளை ஒப்பிடவும், பொதுமக்கள் தங்களுக்கான மருந்து செலவுகளைத் திட்டமிட்டு மேற்கொள்ளவும் இந்த உத்தரவு உதவுவதாக, அவர் மேலும் விவரித்தார்.
”உதாரணத்திற்கு, மருந்தகம் ஏ-வில் மருந்து விலை பன்னிரெண்டு ரிங்கிட்டில் உள்ளது. அதே மருந்து மருந்தகம் பி-வில் பதினைந்து ரிங்கிட்டிற்கு உள்ளது. மருந்தகம் சி-யில் இருபது ரிங்கிட்டில் இருக்கலாம். ஆக, இந்த சூழ்நிலையில், எந்த மருந்தகத்தில் அதனை வாங்க வேண்டும் என்ற சிறந்த முடிவை பொதுமக்களால் மேற்கொள்ள முடியும்”, என்று வழக்கறிஞர் சரவணன் கூறினார்.
இதனிடையே, மருந்துகளுக்கான விலைப்பட்டியலைப் பொதுவில் வைக்க தவறும், தனியார் மருத்துவமனைகளும், சிகிச்சையகங்களும் சட்ட ரீதியில் சில சிக்கல்களை எதிர்நோக்க கூடும் என்று கூறிய அவர், அது குறித்து இவ்வாறு விவரித்தார்.
”பொதுமக்கள் புகாரளித்தால், விலைப்பட்டியலைப் பொதுவில் வைக்காத மருந்தகங்களுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான அபராதம் வழங்கப்படலாம்”, என்றார் அவர்.
எனவே, சுகாதாரம் மற்றும் மருந்து சேவைகளில் ஏற்படும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் இம்முயற்சி முற்றிலும் வரவேற்கக் கூடியது என்று, இன்றைய சட்டம் தெளிவோம் அங்கத்திற்காக தொடர்பு கொண்டபோது வழக்கறிஞர் சரவணன் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
Source : Bernama
#MedicinePrice
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews