கெஅடிலான் உதவித் தலைவர் பதவிக்கு ரமணன் போட்டி

கெஅடிலான் உதவித் தலைவர் பதவிக்கு ரமணன் போட்டி

கோலாலம்பூர், 24/03/2025 : வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் கெஅடிலான் கட்சித் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக, தகவல் பிரிவின் முதலாவது துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

கெஅடிலான் கட்சியை அடிமட்டத்தில் இருந்து உயர்மட்டம் வரை வலுப்படுத்தும் நோக்கத்தில், தாம் இம்முடிவை எடுத்துள்ளதாக, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சருமான ரமணன் கூறியுள்ளார்.

இந்த ஒரு முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்னதாக, தாம் அது தொடர்பில் நாடு முழுவதும் உள்ள தலைவர்கள், நண்பர்கள் மற்றும் கெடிலான் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டதாக டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தமது முகநூலில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்காலத்திற்காக, போராட்ட உணர்வுடன், அனைவரோடும் ஒன்றிணைந்து சிறப்பாகச் செயல்பட முடியும் என்று தாம் நம்புவதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், போட்டியிடும் தமது முடிவு குறித்து கட்சியின் தலைவர், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் தாம் முன்பே தெரிவித்துள்ளதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் கூறினார்.

கட்சியின் உதவி தலைவர் பதவியைத் தற்காத்துக்கொள்ளப் போவதாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி, நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹருன், இயற்கைவளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் சாங் லி காங் மற்றும் நூருல் இஸ்ஸா அன்வார் ஆகிய ஐவரும் முன்னதாக கூறியிருந்தனர்.

Source : Bernama

#RRamanan
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews