தெலுக் இந்தான், 21/03/2025 : மார்ச் 12-இல் இருந்து 16-ஆம் தேதிக்கு உட்பட்ட காலக்கட்டத்தில் 28.85 கிலோகிராம் எடையிலான போதைப் பொருளை விநியோகித்ததாக, நான்கு ஆடவர்கள் இன்று, தெலுக் இந்தான் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினர்.
மொழிப்பெயர்ப்பாளரால் தமிழில் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டுகள் புரிந்ததாக அவர்கள் அனைவரும் தலையசைத்தனர்.
எனினும், மஜிஸ்திரேட் நைடாதுல் அதிரா அஸ்மான் முன்னிலையில் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
சுங்கை டுவா உலு பெர்னாம், கம்போங் பாருவில், 27,050 கிராம் மற்றும் 1,800 கிராம் Methamphetamine வகை போதைப் பொருளை விநியோகித்ததாக, என்.தேவந்திரன், பி.சிவகணேஷ், பி.வசந்தன் மற்றும் என்.மகேந்திரன் ஆகிய நால்வரும் இரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளனர்.
1952-ஆம் ஆண்டு அபாயகரப் போதைப் பொருள் சட்டம் செக்ஷன் 39B(1)(A)-இன் கீழ் குற்றம் சுமதப்பட்டுள்ள நிலையில், அதேச் சட்டம் செக்ஷன் 39B(2)-இன் கீழ் தண்டனை விதிக்கப்படலாம்.
அதோடு, மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை 15 பிரம்படிகள் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 34-உடனும் அக்குற்றப்பதிவுகள் வாசிக்கப்பட்டன.
மூன்று வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளின் மூலம் கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் 16 லட்சம் ரிங்கிட் மதிப்புடையது என்று புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறை இடைக்கால இயக்குநர் டிசிபி மாட் சனி @ முஹமட் சலாஹுடின் செ அலி முன்னதாக தெரிவித்திருந்தார்.
Source : Bernama
#TelukIntan
#DrugTrafficking
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews