பிரிக்பீல்ட்ஸ், 19/03/2025 : SME CORPORATION MALAYSIA ஆதரவில் உருவாக்கப்பட்ட I-BAP எனும் இந்திய சிறு வணிகர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 48 இந்திய சிறு வர்த்தக நிறுவனங்களுக்கு 29 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட்டை உட்படுத்தி இன்று மானியம் வழங்கப்பட்டது.
சிறுவணிகர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் வணிகத்துறை வளர்ச்சியையும் முன்னிறுத்தி வழங்கப்படும் I-BAP மானியமானது, மேலும் சில தளர்வுகளுடன் இவ்வாண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
கடந்தாண்டு அக்டோபரில் இம்மானியத்திற்கான முதற்கட்ட விண்ணப்பம் திறக்கப்பட்டிருந்தபோது மூன்று லட்சம் ரிங்கிட்டிற்கு மேலாக ஆண்டு வியாபாரம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
குறு மற்றும் சிறு வியாபாரிகளுக்கு அது மிகவும் சவாலாக இருந்ததோடு, அந்த இலக்கை அடைய முடியாமல் பலரும் தவித்தனர்.
இந்நிலையைப் புரிந்து கொண்ட அமைச்சு SME CORPORATION உடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக தற்போது அதற்கு தளர்வு வழங்கப்படுள்ளதாக டத்தோ ஶ்ரீ ரமணன் தெரிவித்தார்.
“இம்முறை 30 லட்சம் ரிங்கிட் அளவில் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றது. இம்மாதம் 7ஆம் தேதியிலிருந்து அவர்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த காலங்களைப் போல் அல்லாமல் இந்த முறை ஓராண்டு கால வியாபாரம் ஒரு லட்சம் ரிங்கிட்டிற்கும் குறைவாக இருந்தாலும் அவர்களும் இதில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
இந்திய வணிகர்களுக்கு மிகவும் பலன் அளிக்கக்கூடிய இத்திட்டத்தை சமூகவலைத்தளங்களில் அனைவரும் பரவலாகப் பகிர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
“ஐ – பிரீப் மற்றும் தெக்குன் திட்டங்கள் ஆண்டுக்கு ஆண்டு தொகை அதிகரித்திருப்பது போல, இத்திட்டத்திலும், அதிகமான பகிர்வுகள் இருந்தால் வருங்காலத்தின் இன்னும் அதிகமான மானியத்தை நாம் அவர்களிடமிருந்து கேட்டுப் பெற முடியும்,” என்றார் அவர்.
இன்று புதன்கிழமை கோலாலம்பூரில் SME CORPORATION MALAYSIA அலுவலகத்தில், இந்த மானியத்திற்கான மாதிரி காசோலைகளை அவர்கள் பெற்றுக் கொண்டனர்.
Source : Bernama
#SMECORP
#IBAP
#Ramanan
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews