ஜார்ஜ்டவுன், 13/03/2025 : நேற்று, பினாங்கு, தெலுக் பஹாங் கடற்கரை ஓரத்தில் வீற்றிருக்கும் ஶ்ரீ சிங்கமுக காளியம்மன் ஆலயத்தின் மாசிமக தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
128-ஆவது ஆண்டாக கொண்டாடப்பட்ட இத்திருவிழாவில், மழையையும் பொருட்படுத்தாமல், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் பொதுமக்களும் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிய காட்சிகள் தொகுப்புகள் தொடர்ந்து இடம் பெறுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்துடன் பெளர்ணமி கூடிவரும் மக நட்சத்திர நாளில், மாசி மகம் கொண்டாடப்படுகிறது.
சுமார் 122 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஶ்ரீ சிங்கமுக காளியம்மன் கோவிலில் வீற்றிருக்கும் தேவிக்கு நன்றி கூறி, மரியாதைச் செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தெப்பத் திருவிழா கொண்டாடப்பட்டு வருவதாக கூறுகின்றார் ஆலய ஆலோசகர் டாக்டர் ஹரிஷ் சத்தியமூர்த்தி.
”இதில் பினாங்கு மாநில மக்கள் மட்டுமின்றி பேராக், பெர்லிஸ், கெடா, ஜோகூர், திரெங்கானு போன்ற மாநிலங்களிலிருந்தும் மக்கள் கலந்து கொண்டுள்ளனர். அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. அதிகாலையில் விசேஷ அபிஷேகம் நடைபெற்றது. பிறகு, பூஜை, அன்னதானம் மற்றும் மேலும் சில சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது”, என்று அவர் கூறினார்.
மேலும், இயற்கையைப் பாதுகாப்பதோடு, கடல்வாழ் உயிரினங்களுக்கும் பாதகம் ஏற்படாமல் இருப்பதை உறுதிச் செய்ய தெப்பத் திருவிழாவின்போது நெகிழி பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்க்கும்படி, மாநில அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுக்கோளைக் கடைப்பிடித்து வருவதாகவும், டாக்டர் ஹரிஷ் கூறினார்.
”பாலிஸ்டிரீன்னை ஒவ்வொரு ஆண்டும் மக்கள் விற்பனையில் வைத்திருப்பார்கள். பக்த பெருமக்கள் அவர்களின் நேர்த்திக் கடனுக்காக கடலில் விடுவர். குறிப்பாக, அம்மா தெப்பத்தில் சென்றுக் கொண்டிருக்கும்போது விடுவார்கள். இப்பொழுது மாநில அரசாங்கம் மற்றும் ஆலய நிர்வாகம் பாலிஸ்டிரீன்னைப் பயன்படுத்தி விளக்கு விட முடியாது என்று கூறியதால், இயற்கைக்கு ஏற்புடைய பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தால், பக்த பெருமக்கள் இயற்கையைக் காப்பாற்ற முடியும்”, என்றார் அவர்.
புண்ணிய தலங்களையும், புண்ணிய நதிகளையும் வணங்குவதன் மூலம் பாவங்கள் போக்கப்படும் என்ற நம்பிக்கையுடன், மனதில் இருந்த வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காக, பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை, அலங்கரிக்கப்பட்ட அகல் விளக்குகள் வழியாக கடல் நீரில் மிதக்கவிட்ட காட்சிகளையும் காண முடிந்தது.
”நாங்கள் சுற்றுப்பயணிகள். ஒரு பேருந்தை வாடகைக்கு எடுத்து 44 பேர் வந்திருக்கின்றோம். நமக்கு ஒரு நல்ல உணர்வை வழங்குகிறார்கள். அம்மன் சக்தி வாய்ந்தவர் என்பதால் தான் அது நமக்கு கிடைத்துள்ளது. அம்மன் ஊர்வலம் தொடங்கியதும் மழையும் நின்றுவிட்டது சந்தோஷமாக நாங்கள் கொண்டாட தொடங்கிவிட்டோம்”, என்று கூறினார் சிலாங்கூர், கோத்தா டமன்சாராவைச் சேர்ந்த பிரியா.
வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தேரில் ஶ்ரீ சிங்கமுக காளியம்மனைக் கடலோரப் பகுதிக்குக் கொண்டு சென்று, இரவு நடைபெற்ற விசேஷ பூஜைகளுடன் நள்ளிரவு மணி 12-க்கு மேல், மாசிமக தெப்பத் திருவிழா நிறைவடைந்தது.
Source : Bernama
#PenangMasimagam
#TheppaThiruvizha
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.