2024-இல் 109.9% உயர்ந்த I-SARAAN திட்டத்திற்கான பங்களிப்பு

2024-இல் 109.9% உயர்ந்த I-SARAAN திட்டத்திற்கான பங்களிப்பு

கோலாலம்பூர், 13/03/2025 :  2023-ஆம் ஆண்டில் 144 கோடி ரிங்கிட்டாக இருந்த i-Saraan திட்டத்திற்கான பங்களிப்பு, 2024-ஆம் ஆண்டு 109.9 விழுக்காடு உயர்ந்து, 260 கோடி ரிங்கிட்டாக பதிவானது.

அரசாங்க ஊக்கத்தொகை ஒதுக்கீட்டின் அளவு உயர்ந்ததே, அந்த அதிகரிப்பிற்குக் காரணம் என்று இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.

2023-ஆம் ஆண்டில் மூன்று லட்சத்து 83-ஆயிரத்து 82 உறுப்பினர்களை உட்படுத்தி, ஐந்து கோடியே 47 லட்சம் ரிங்கிட்டாக இருந்த அரசாங்க ஊக்கத் தொகை, 2024-ஆம் ஆண்டில் ஐந்து லட்சத்து 29-ஆயிரத்து 667 உறுப்பினர்களை உட்படுத்தி,11 கோடியே 48 லட்சம் ரிங்கிட்டாக அதிகரித்ததாக  டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா கூறினார்.

“2025-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், i-Saraan திட்டத்திற்கான மேம்பாடுகளை அரசாங்கம் அறிவித்தது. பொருந்தக்கூடிய ஊக்கத் தொகையை 15 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக அதிகரிக்கும் வகையில் அந்த அறிவிப்பு அமைந்தது. ஓராண்டிற்கு அதிகபட்சமாக 500 ரிங்கிட் மற்றும் ஒரு தனிநபருக்கு வாழ்நாள் வரம்பு 5,000 ரிங்கிட்டிற்கு உட்பட்டுள்ளது”, என்று அவர் கூறினார்.

2023, 2024-ஆம் ஆண்டுகளில், ஊழியர் சேம நிதி வாரியத்தின்  i-Saraan மற்றும் i-Suri திட்டங்களுக்கு அரசாங்கத்தின் ஒதுக்கீடுகள் குறித்து, செனட்டர் முஹமட் ஹஸ்பி முடா, இன்று மேலவையில் எழுப்பியக் கேள்விக்கு அமிர் ஹம்சா அவ்வாறு பதிலளித்தார்.

இதனிடையே, 2024-ஆம் ஆண்டில் i-Suri திட்டத்தின் கீழ் 75,196 உறுப்பினர்கள் பத்து கோடியே 14 லட்சம் ரிங்கிட் அரசாங்க ஊக்கத் தொகையைப் பெற்றுள்ள நிலையில், 2023-ஆம் ஆண்டு 42,759 உறுப்பினர்களுடன் ஒப்பிடுகையில் அது 77 விழுக்காடு அதிகம் என்ற கூடுதல் தகவலையும் அவர் பகிர்ந்துக் கொண்டார்.

Source : Bernama

#iSaraan
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.