கோலாலம்பூர், 12/03/2025 : அண்மையில் இந்தோனேசியா, மேடானில் நடைபெற்ற உலக இளைஞர் அறிவியல் கண்டுபிடிப்பு புத்தாக்கப் போட்டி, WYSll STEM 2025-இல் மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்து கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் தங்கம் வென்று நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பெருமைச் சேர்த்துள்ளனர்.
MYSO எனப்படும் மலேசிய இளம் அறிவியலாளர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இங்கிருந்து தேர்வு செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்ட ஈப்போ, மெத்தடிஸ்ட் பெண்களை இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த உஷேத்தா ராஜேந்திரன், உஷானா ராஜேந்திரன், டானியா ராஜேந்திரன் ஆகிய மூவரே அச்சாதனையைப் புரிந்த தங்கமகள்களாவர்.
உலக அளவிலான ஒன்பது நாடுகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட குழு படைப்பாளர்களாக மொத்தம் 641 பேர் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
ஆரம்ப, இடைநிலைப்பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி கல்லூரி, பல்கலைகழக மாணவர்கள் ஆகியோருடன் விரிவுரையாளர்கள் மற்றும் முனைவர்களும் கலந்து கொள்ளும் வகையில் பல பிரிவுகளில் இப்போட்டி நடைபெற்றது.
அதில், AYOTHI SMART SOLAR POWERED MITIN GAS DETECTOR என்ற தலைப்பில் தமது மகள்கள் மேற்கொண்ட புத்தாக்கக் கண்டுபிடிப்பு குறித்து விவரிக்கிறார் அவர்களின் தந்தை இராஜேந்திரன்.
“நச்சுத்தன்மைமிக்க வாயுவைக் கண்டறிவதே இதன் நோக்கமாகும். பெரும்பாலான தொழிற்சாலைகளில் இதைக் கண்டறிவதற்கு ஒருவகை இயந்திரத்தை அவர்கள் வைத்திருப்பர். ஆனால் பள்ளிக்கூடங்களில் அதேபோன்ற சாதனங்கள் இல்லை. இந்த வாயுவானது மிகவும் ஆபத்தானதும் கூட. கடந்த 2018ஆம் ஆண்டு ஜோகூர் பாசிர் கூடாங்கில் பலர் இந்த வாயுவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதை நோக்கமாகக் கொண்டுதான் பிள்ளைகள் இந்த முயற்சியை முன்னெடுத்தனர்,” என்று அவர் விவரித்தார்.
மேலும், STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தின் அடிப்படையில் ஒருவர் தமது எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைத்து கொள்வது என்ற அடிப்படையிலே இப்போட்டி நடத்தப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நேர நிர்வகிப்பு, பள்ளிப் பாடங்களையும் கண்டுபிடிப்பு குறித்து ஆய்வையும் சூழலுக்கு ஏற்ப பகுப்பாய்வு செய்து கற்பது, தியாக மனப்பான்மை போன்றவையே தமது மகள்கள் அடைந்த வெற்றிக்கான தாரக மந்திரம் என்றும் அவர் கூறினார்.
ஏற்கனவே லண்டன், இத்தாலி போன்ற வெளிநாடுகளில் நடைபெற்ற பல போட்டிகளில் தமது பிள்ளைகள் கலந்து சாதனைப் படைத்திருந்ததாக நினைவுகூர்ந்த இராஜேந்திரன், வெளிநாட்டில் நடைபெறும் இத்தகைய போட்டிகளில் மலேசியாவைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
“இதுபோன்றதொரு போட்டிகளில் பிள்ளைகள் கலந்து கொள்ளும் சிறந்த வாய்ப்புகள் கிடைக்கின்றன. இதனால் புதுவகை உத்திகள், மேடையில் நிற்கும் போது அச்சம் கொள்ளாமை, படைப்பாற்றல் ஆகிய பல திறனைகளை அவர்களால் வளர்த்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்,” என்றார் அவர்.
இதேபோட்டியில், விரிவுரையாளர் பிரிவில் தமது துணைவியார் திலகவதியும் கலந்து கொண்டு தங்கம் வென்றது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் இராஜேந்திரன் குறிப்பிட்டார்.
சிறுவயது முதலே அம்மாணவிகளின் திறமை பட்டைத் தீட்டப்பட்டு வருவதாக அவர்களின் கண்காணிப்பாளரான சூரியபிரகாஷ் விஜயசூரியா கூறினார்.
இதனிடையே, ஈப்போ, செயின்ட் மைக்கல் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த மற்றொரு மாணவரான ஷாமளன் சத்திய சீலனும் இப்போட்டியில் கலந்து SMART IRRIGATION SYSTEM என்ற தலைப்பில் ஒரு படைப்பை படைத்து, அதற்காக தங்கமும் சிறப்பு நிலைத்தன்மை விருதையும் வென்றிருந்தார்.
Source : Bernama
#WYSllSTEM2025
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.