அதிகரித்து வரும் மின்னியல் சிகரெட் பயன்பாடும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளும்

அதிகரித்து வரும் மின்னியல் சிகரெட் பயன்பாடும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளும்

கோலாலம்பூர், 10/03/2025 : முறையான சட்ட அமலாக்கம் இல்லாததால், இளைஞர்களிடையே குறிப்பாக, பள்ளி மாணவர்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கமும், எளிதில் கிடைக்கக்கூடிய VAPE எனப்படும் மின்னியல் சிகரெட்டி பயன்பாட்டின் தாக்கமும் அதிகரித்து வருகிறது.

அவை, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் நிலையில், மின்னியல் சிகரெட்டைப் பயன்படுத்துவோர் மட்டுமின்றி அதனை விற்பனை செய்யும் தரப்பினரும் சட்ட ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறுகின்றார் வழக்கறிஞர் கார்த்திகேசன் ஷண்முகம்.

NICOTINE கலவையுடன் விற்கப்படும் மின்னியல் சிகரெட்டைப் புகைக்கும் பழக்கத்திற்கு அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் அடிமையாகி வருகின்றனர்.

சுமார் 16,000 சுவைகளில் விற்கப்படும் வேப் புகையை உள் இழுப்பதினால், உடனடியாக அவர்களின் மூளையைப் பாதிக்கும் அபாயம் இருப்பதாக முன்னதாக, சுகாதார அமைச்சு கூறியிருந்தது.

இந்நிலையில், வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றாமல் பள்ளியிலோ அல்லது பொது இடங்களிலோ மின்னியல் சிகரெட்டைப் பயன்படுத்தும் மாணவர்களுக்கு எதிரான மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்து வழக்கறிஞர் கார்த்திகேசன் ஷண்முகம் இவ்வாறு விளக்குகின்றார்.

”பள்ளி மாணவர்கள் செக்‌ஷன் 13-இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டால் இவர்களுக்கு அதிகபட்சம் 500 ரிங்கிட் அபராதம் அல்லது சமூக சேவை அல்லது குழந்தைகள் சட்டம் 2001-க்கு உட்பட்டு இவர்களுக்கு தண்டனை விதிக்கப்படலாம்”, என்று அவர் கூறினார்.

மின்னியல் சிகரெட்டின் பயன்பாடு மற்றும் அதன் விற்பனை குறித்த சட்டங்கள், இரண்டு பிரிவுகளாக வகுக்கப்பட்டிருப்பதாக, கார்த்திகேசன் குறிப்பிடுகின்றார்.

18 வயதிற்கு கீழ் உள்ள தரப்பினர் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு வெவ்வேறு முறையிலான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவதையும் அவர் விவரித்தார்.

”இதே குற்றத்தை ஒரு நிர்வாகம் செய்தால், அதாவது, மாணவர்களுக்கு அவர்கள் இந்த வேப்பை விற்பனை செய்தால், முதல் குற்றத்திற்காக இவர்களுக்கு அதிகபட்சம் ஒரு லட்சம் அல்லது இருபதாயிரம் ரிங்கிட்டிற்குக் குறையாத அபராதம் அல்லது அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்”, என்று அவர் கூறினார்.

இதனிடையே, மின்னியல் சிகரெட்டைப் பயன்படுத்தும் எந்தவொரு தனிப்பட்ட நபரையும் குற்றம் சாட்டுவதற்கு முன்னதாக, அதனை விற்பனை செய்யும் தரப்பினர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வேண்டும் என்று கார்த்திகேசன் தெரிவித்தார்.

இதனால், மூளை மற்றும் நுரையீரல் பாதிப்பு, பெருங்குடல் புற்றுநோய் என்று கடுமையான பின்விளைவுகள் ஏற்படுவதால், அனைத்து தரப்பும் இதில் அலட்சியமின்றி செயல்பட வேண்டும் என இன்றைய சட்டம் தெளிவோம் அங்கத்தில் வழக்கறிஞர் கார்த்திகேசன் வலியுறுத்தினார்.

Source : Bernama

#Vape
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.