பகுதி நேரப் பெண் பாடகிக்கு மரணம் விளைவித்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

பகுதி நேரப் பெண் பாடகிக்கு மரணம் விளைவித்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

ஆயர் குரோ, 07/03/2025 : கடந்த மாதம் பகுதி நேரப் பெண் பாடகியைக் காயப்படுத்தி, அவருக்கு மரணம் விளைவித்ததற்காக வேலையில்லா ஆடவர், இன்று மலாக்கா ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

மாஜிஸ்திரேட் நூர் அபிஃகா ரசியா சைனுரின் முன்னிலையில் அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட ஹொங் யெவ் பெங், அதனைப் புரிந்ததாக தலையசைத்தார்.

இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டிருப்பதால், அவ்வாடவரிடமிருந்து எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி நள்ளிரவு மணி 1.30 தொடங்கி 3.30-க்குள், ஜாலான் ஶ்ரீ மங்கா, தாமான் ஶ்ரீ மங்கா செக்‌ஷன் 1, மலாக்கா என்ற முகவரியில் உள்ள ஒரு வீட்டில் 52 வயதான லிங் லு செங்கிற்கு உடல் முழுவதும் காயங்களை ஏற்படுத்தி, அவருக்கு மரணம் விளைவிக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்ததாக ஹொங் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதால், குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை விதிக்கப்படலாம்.

மரணத் தண்டனை விதிக்கப்படாவிட்டால், 30 ஆண்டுகளுக்கும் குறையாத அல்லது 40 ஆண்டுகளுக்கும் மேற்போகாத சிறைத் தண்டனையும் 12-க்கும் குறையாத பிரம்படியும் விதிக்கப்படலாம்.

அரசு தரப்பு துணை வழக்கறிஞரின் பரிந்துரைக்கு ஏற்ப கோரப்பட்ட அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு ஏப்ரல் 21-ஆம் தேதியை மாஜிஸ்திரேட் நூர் அபிஃகா நிர்ணயித்தார்.

Source : Bernama

#CrimeNews
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.