பெட்டலிங் ஜெயா, 04/03/2025 : ERA FM வானொலி நிலையத்தின் சில அறிவிப்பாளர்கள் “வேல் வேல்” என்று கேலியாக பாடி இழிவுபடுத்தியதோடு, அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததற்கும் கடுமையாக கண்டனம் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம் என்று பேரவை தேசியத் தலைவர் முருகன் மணியம் தெரிவித்தார். இந்த செயல் இந்து மத உணர்வுகளை அவமதிப்பதோடு மட்டுமல்லாமல், தேசிய ஒற்றுமையையும் பாதுகாக்கும் 3R (Race, Religion, Royalty) சட்டத்திற்கு முரணாக உள்ளதாகக் கருதப்படுகிறது என்று சாடினார்.
இது மேலும் கவலைக்குரியதாக இருக்கிறது, ஏனெனில் சம்பந்தப்பட்ட நபர்கள் இசுலாமிய மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்து, “வேல் வேல் வெற்றி வேல்” என்பதைக் கேலிச் சிரிப்புடன் உச்சரித்துள்ளனர், இச்செயல் பெரும் அறிவின்மை செயலாகவே கருதப்படுகிறது. மலேசியா போன்ற பல்வேறு இன, மதங்களை உள்ளடக்கிய நாட்டில் இப்படிப்பட்ட செயல்கள் தீவிர மதசார்பின்மை மற்றும் சமூக ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை கீழ்க்கண்டவாறு வலியுறுத்துகிறது:
1. மத விவகாரங்கள் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான அமைச்சுகள் இந்த விவகாரத்தை மிகக் கவனமாக விசாரிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மத உணர்வு மற்றும் தேசிய ஒற்றுமையின் முக்கியத்துவத்தை விளக்க உளவியல் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
2. ERA FM சம்பந்தப்பட்ட அறிவிப்பாளர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் முதன்மை வானொலி நிலையம் எனும் நன்மதிப்பை கெடுத்து, மலேசியா சட்டங்களை மீறி, சர்ச்சையை உருவாக்கியுள்ளனர்.
3. மலேசியா தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (SKMM) இந்த விவகாரத்தில் ERA FM-இன் அதிகாரப்பூர்வ விளக்கத்தை கோர வேண்டும். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாதவாறு உரிய கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
4. சம்பந்தப்பட்ட ERA FM அறிவிப்பாளர்கள் மற்றும் மேலாளர்கள் பொதுமக்களிடம் திறந்த மனதுடன் மன்னிப்பு கோர வேண்டும். இது அவர்கள் தவறை உணர்ந்து, மலேசியா இந்து மத உணர்வுகளை மதிக்கின்றனர் என்பதற்கான அடையாளமாக இருக்கும்.
5. ERA FM சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் பதிவுகளை அதிகமாக கண்காணிக்க வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு பதிவும் அவர்கள் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை பிரதிபலிக்கிறது.
இவ்வாறான செயல்கள் மீண்டும் நிகழாத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மலேசியாவில் சமாதானத்தையும் இனஒற்றுமையையும் பேணுவதற்காக, பேச்சு சுதந்திரத்தை மற்ற மதங்களை அவமதிக்க பயன்படுத்தக்கூடாது என்பதை உறுதியாக நினைவுபடுத்துகிறது. அனைத்தும் இயல்பான முறையில் நடந்தேற ERA FM அறிவிப்பாளர்கள் மிக உறுதியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் தேசியத் தலைவர் முருகன் மணியம்.
#MajlisKelabBellBeliaTamilMalaysia
#EraFM
#VelVel
#DaturSeriMSaravanan
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.