கோத்தா திங்கி, 27/02/2025 : சுயமாகத் தயாரிக்கப்பட்ட உரிமம் அற்ற வேட்டை துப்பாக்கி மற்றும் 108 தோட்டாக்களை வைத்திருந்தததாக, கடந்த வாரம் தம் மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட முதியவர் ஒருவருக்கு, ஆறாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து, கோத்தா திங்கி செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
நீதிபதி ஹைடா பாரிட்சால் அபு ஹசான் முன்னிலையில் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டுகளைக் குற்றம் சாட்டப்பட்ட 65 வயதான ஒமார் புசாரி ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அந்த அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி, கோத்தா திங்கி, பாசிர் பஞ்சாங் தோட்டத்தில் சுடும் ஆயுதத்திற்கான உரிமம் அல்லது ஆயுத பெர்மிட்டை கொண்டிருக்காத, சுயமாகத் தயாரிக்கப்பட்ட வேட்டை துப்பாக்கியை வைத்திருந்ததாக, அம்முதியவர் மீது முதல் குற்றம் சுமத்தப்பட்டது.
அதோடு, அதே அனுமதிகளின்றி 108 தோட்டாக்களை வைத்திருந்ததாக ஒமார் மீது இரண்டாவது குற்றம் சுமத்தப்பட்டது.
அதிகபட்சம் ஏழாண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அதிகபட்சம் 10,000 ரிங்கிட் அபராதம் அல்லது அவ்விரண்டுமே விதிக்க வகைச் செய்யும் 1960-ஆம் ஆண்டு சுடும் ஆயுதம் சட்டம் செக்ஷன் 8 (a)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது.
இந்நிலையில், ஒவ்வொரு குற்றத்திற்கும் தலா 3,000 ரிங்கிட் அபராதம் விதித்து நீதிபதி ஹைடா தீர்ப்பளித்தார்.
Source : Bernama
#IPD
#KotaTinggi
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.