நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 29–ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கோவில்கள் மற்றும் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வணங்கி 3–ம் நாள் அதனை கடல் அல்லது ஆறுகளில் கரைப்பது வழக்கம்.
இதேபோல் கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 200–க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வெள்ளக்கிணர் பகுதியில் உள்ள குட்டையில் கரைத்து வருகின்றனர்.
கடந்த 14 வருடங்களுக்கு முன்பு இந்த குட்டையில் நீர் நிரம்பி வற்றாதகுட்டையாக இருந்தது. அதற்கு பிறகு இங்குள்ள கால்வாய்கள் அடைத்தல் மற்றும் நீர் வரத்து பகுதிகளில் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு என இதன் நீர் வளம் குறைந்தது.
அதனால் இந்த குட்டையில் கடந்த சில வருடங்களாக நீர் இல்லாத காரணத்தால் மாநகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையினர் குட்டையில் லாரிகளில் நீர் நிரப்பி விநாயகர் சிலைகளை கரைத்து வருகின்றனர்.
இதில் 200–க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்படுவதால் கரைத்த ஒரு சில நாட்களிலேயே நீர் வற்றி பாதி கரைந்தும் கரையாமலும் சிலைகள் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது.
இதற்கு பக்தகள் மற்றும் பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இம்முறை விநாயகர் சிலைகளை கோவையில் எப்போதும் நீர் நிரம்பியே இருக்கும் முத்தண்ணன் குளத்திலோ அல்லது மேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலோ கரைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.