ஈப்போ, 26/02/2025 : கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி உலு சிலாங்கூர், பத்தாங் காலியில் உள்ள பள்ளிவாசலில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான காணொளியை பொதுமக்களும் சமூக ஊடக பயனர்களும் கண்மூடித்தனமாக பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அச்சிறுமி 2001-ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் பாதுகாக்கப்பட்டுள்ளதால் அக்காணொளியை மேலும் பரப்புவதும் பகிர்வதும் பொருத்தமற்றது என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ நென்சி சுக்ரி தெரிவித்தார்.
”நாம் தினமும் அவ்விவகாரம் குறித்து பேசுகிறோம். ஆனால், அது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. காணொளியைப் பெற்றவர்கள் அல்லது சம்பவ இடத்தில் இருந்தவர்கள் இந்த விவகாரத்தை அவ்வளவு எளிதில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார் அவர்.
இன்று, பேராக், ஈப்போவில் வட மண்டல அளவிலான அனைத்துலக மகளிர் தின கொண்டாட்டத்தை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அது குறித்து நென்சி விளக்கமளித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன் தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஆலோசனைகளை வழங்குவது உட்பட அரச மலேசிய போலீஸ் படை PDRM-க்கு ஒத்துழைக்கவும் தமது தரப்பு தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
Source : Bernama
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews