பெண்ணின் கொலை வழக்கில் ஆடவர் ஒருவர் கைது

பெண்ணின் கொலை வழக்கில் ஆடவர் ஒருவர் கைது

குவாந்தான், 15 பிப்ரவரி (பெர்னாமா) —   கடந்த வியாழக்கிழமை, பகாங், குவாந்தான், தஞ்சோங் லும்பூர் பாலம் அருகில் உள்ள ஆற்றங்கரையில் சடலமாக மீட்கப்பட்ட உணவு வியாபாரம் செய்யும் பெண்ணின் கொலை வழக்கில் தொடர்புடையதாக, சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவரை போலீஸ் கைது செய்தது.

இன்று அதிகாலை மணி 5.30 அளவில், கோலா திரெங்கானு, வகாவ் தெம்பெசு கோங் பாடாக் குடியிருப்பு பகுதியில், 53 வயதான அவ்வாடவரை போலீசார் கைது செய்ததாக, குவாந்தான் மாநில போலீஸ் தலைவர் ஏசிபி வான் முஹமட் சஹாரி வான் புசு கூறினார்.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ் விசாரணை மேற்கொள்ள, அச்சந்தேக நபருக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவை, இன்று குவாந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விண்ணப்பித்ததாக, ஏசிபி வான் முஹமட் சஹாரி, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

விசாரணைக்கு உதவும் பொருட்டு ஆவணங்கள் மட்டுமின்றி மோதிரம், ரொக்கப் பணம் மற்றும் உடைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, வெற்றிகரமாக சந்தேக நபரைத் தேடி கண்டுபிடித்த திரெங்கானு மாநில போலீஸ் தலைமையகத்திற்குப் பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஶ்ரீ யாஹ்யா ஒத்மான் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

கடந்த வியாழக்கிழமை, தஞ்சோங் லும்பூர் பாலம் அருகில் உள்ள ஆற்றங்கரையில் உணவு வியாபாரம் செய்யும் 37 வயதான நோர்ஷமிரா சைனால் எனும் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக, முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

Source : Bernama

#PDRM
#Kuantan
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews