ஜார்ஜ்டவுன், 10/02/2025 : தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் பிரசித்திப் பெற்ற தங்க மற்றும் வெள்ளி இரதங்களைக் காண்பதற்காக லெபோ குயின் சாலை தொடங்கி, ஆலயம் வீற்றிருக்கும் ஜாலான் கெபூன் பூங்கா சாலை வரையில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் திரளாக குழுமியிருந்தனர்.
பினாங்கு மாநிலத்தில் ஒரு நாளைக்கு முன்னதாக கொண்டாடப்படும் தைப்பூசக் கொண்டாட்டத்தின் தனிச்சிறப்பு ‘செட்டி பூசம்’ என்று அழைக்கப்படுகிறது.
இதில் குறிப்பாக மாநிலத்தில் உள்ள செட்டியார் சமூகத்தினர், மயில் காவடிகளுடன் முருகன் சிலையை ஏந்தி வெள்ளி இரதத்தில் ஊர்வலமாக பவனி வருவர்.
வெள்ளி இரத ஊர்வலம் மட்டுமின்றி, முருகப்பெருமானின் புனித ஆயுதங்களான வேல் அல்லது ஈட்டிகளை ஏந்திய தங்க ரதங்களும் 2017-ஆம் ஆண்டு முதல் வலம் வருவதால் பினாங்கு தீவில் தைப்பூசம் கூடுதலாக களைக் கட்டியுள்ளது.
காலை 6 மணிக்கு லெபோ குயினில் இருந்து ஜாலான் கெபூன் பூங்காவில் உள்ள ஸ்ரீ அருள்மிகு பாலதண்டாயுதபானி ஆலயத்தை நோக்கி தங்க இரதம் புறப்பட்டது.
அதைத் தொடர்ந்து 131 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வெள்ளி இரதம் சுமார் ஒரு மணி நேரம் கழித்து, லெபோ பினாங்கில் உள்ள நகரத்தார் ஆலயத்திருந்து ஜாலான் ஆயர் தெர்ஜுனில் உள்ள நாட்டுக்கோட்டை செட்டியார் கோயிலுக்கு புறப்பட்டது.
இந்திய பாரம்பரிய இசைக்கருவிகளான மிருதங்கம் மற்றும் நாதஸ்வரங்களின் ஒலி முழங்க பவனி வரும் இரத ஊர்வலம் திங்கள்கிழமை நள்ளிரவுக்கு முன்னதாக தங்களின் இலக்கை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாலான் மெகஸின் மற்றும் ஜாலான் டத்தோ கெராமாட் முழுவதிலும் பெர்னாமா மேற்கொண்ட கண்ணோட்டத்தில் அக்கொண்டாட்டம் களைக்கட்டியிருந்ததுடன் கொண்டாட்டப் பகுதியினைச் சுற்றிலும் போலீஸ் அதிகாரிகள் ரோந்து நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதைக் காண முடிந்தது.
தைப்பூசத்தின் போது இரத ஊர்வலம் எந்த அளவிற்கு பிரசித்திப் பெற்றதோ அதே அளவிற்கு அம்மாநிலத்தில் தண்ணீர் மற்றும் அன்னதானப் பந்தல்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
இவ்வாண்டும் பக்தர்களின் பசி மற்றும் தாகத்தைத் தீர்க்க நூற்றுக்கும் மேலான பந்தல்கள் போடப்பட்டுள்ளன.
Souce : Bernama
#ChettiPusam
#Thaipusam
#Thaipusam2025
#ThaipusamInMalaysia
#Penang
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews