தைப்பூசத்தில் குறைந்த எண்ணிக்கையிலான தேங்காய்களை உடைக்க வேண்டும் – பி.ப.ச

தைப்பூசத்தில் குறைந்த எண்ணிக்கையிலான தேங்காய்களை உடைக்க வேண்டும் - பி.ப.ச

கோலாலம்பூர், 09/02/2025 : தைப்பூசத்தில் குறிப்பாக இரத ஊர்வலத்தின் போது தேங்காய்கள் உடைக்கப்படுவது வழக்கம்.

எனினும், தற்போது விலை உயர்வு காணும் வாய்ப்பு உள்ளதோடு வீண் விரயமும் ஆகுவதால் குறைந்த எண்ணிக்கையிலான தேங்காய்களை உடைக்குமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பக்தர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

தைப்பூச திருவிழாவில் தேங்காய் அத்தியாவசியம் என்றாலும் அவற்றை தேவையான அளவு மட்டும் பயன்படுத்தும் படி, ஒவ்வோர் ஆண்டும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறிவுறுத்தி வருகின்றது.

இந்நிலையில், கடந்த ஆண்டு பலர் தங்களின் அறிவுறுத்தலைப் பின்பற்றியதாக அச்சங்கத்தின் ஆய்வு & கல்வி பிரிவு அதிகாரி என்.வி. சுப்பாராவ் தெரிவித்தார்.

“மலேசியாவில் பயிர் செய்யப்படும் தேங்காய் ஏறக்குறைய நான்கு ரிங்கிட்டிற்கு விற்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதிகமாக உடைத்தால் அவை குப்பைத் தொட்டிக்குப் போகும். கடந்த ஆண்டு இதுபோன்ற அழைப்பை விடுத்தபோது சீனர்கள் உட்பட உடைக்கின்ற தேங்காய் எண்ணிக்கையைக் குறைத்து மீதமுள்ள பணத்தை ஆதரவற்றோர் இல்லங்கள், கல்வி தேவைகளுக்கு, பள்ளிக் கூடங்களுக்கு அவர்கள் அன்பளிப்பாக கொடுத்தார்கள்,” என்று அவர் கூறினார்.

மேலும், உள்ளூரில் தேங்காய்களின் உற்பத்தி குறைவாக இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

தைப்பூசக் காலக்கட்டத்தில் அவற்றின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பக்தர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சுப்பாராவ் நினைவுறுத்தினார்.

“தேங்காய் உடைக்கக்கூடிய எண்ணிக்கை குறையும் காரணத்தால், நீங்கள் தேங்காய்களை இன்னும் வாங்க வேண்டும் என்று நினைத்தால் அதனுடைய விலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. அனைவரும் அந்தத் தேங்காயை வாங்க வேண்டும் என்று நினைத்தால், 3 ரிங்கிட் 50 சென் விலையில் இருக்கும் தேங்காய் ஐந்து ரிங்கிட் வரையில் விற்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும்,” என்றார் அவர்.

எனவே, தேங்காய் உடைக்கும் நேர்த்திக் கடனில் முறையான சமய நெறியைப் பின்பற்றுவதோடு மற்ற இனத்தவருக்கும் எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும் என்று சுப்பாராவ் தெரிவித்தார்.

Source : Bernama

#Thaipusam
#Thaipusam2025
#ThaipusamInMalaysia
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.