இந்திய சமுதாயத்திற்கான திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்படுவதை மித்ரா உறுதி செய்யும்

இந்திய சமுதாயத்திற்கான திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்படுவதை மித்ரா உறுதி செய்யும்

கோலாலம்பூர், 07/02/2025 :  13-வது மலேசிய திட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கான திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் திறம்பட செயல்படுவதை உறுதி செய்வதற்குக் கண்காணிப்பு முகவராக செயல்படுவதற்கான பரிந்துரையை இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா பொருளாதார அமைச்சிடம் முன் வைத்துள்ளது.

இப்பரிந்துரை பொருளாதார அமைச்சரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரஃபிசி ரம்லியைச் சந்திப்பதற்குத் தமது தரப்பு காத்திருப்பதாக மித்ராவின் சிறப்பு செயற்குழு தலைவர் பிரபாகரன் பரமேஸ்வரன் தெரிவித்தார்.

”மித்ராவிற்கு இந்தியர்களுக்கான சலுகைகளைப் பகிர்ந்து வழங்குவதில் கண்காணிக்கும் கொள்கை இருந்தால் அரசாங்கம் மூலம் இந்தியர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். சம உரிமைகள் கிடைக்கும். சில வாய்ப்புகள் கிடைக்கவில்லை சிலர் இன்னும் கூறி வருகின்றனர். அதற்கு மித்ராவையே ஒருங்கிணைக்கலாம். அதில் தமிழ்ப்பள்ளிகள் சார்ந்த திட்டங்களும் உள்ளன. நிறைய திட்டங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்”, என்று அவர் கூறினார்.

இந்திய சமுதாயத்திற்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்க கடந்த ஆண்டு இறுதியில் தொழில் வல்லுநர்கள், பங்குதாரர்கள் என்று பல தரப்பினருக்கு அழைப்பு விடுத்து இது குறித்து தாம் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபாகரன் கூறினார்.

அதில் விவாதிக்கப்பட்ட பரிந்துரைகள் அனைத்தும் பொருளாதார அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, சிறுபான்மையினருக்கு ஆணையத்தை உருவாக்குவதும் இப்பரிந்துரைகளில் அடங்கும்.

இதன் வழி இந்திய சமூகம், பூர்வக் குடியினர் உட்பட மலேசியாவில் உள்ள சிறுபான்மையினருக்கு அரசாங்கங்களின் உதவிகள் சென்றடைவதை உறுதி செய்ய முடியும் என்று பிரபாகரன் தெரிவித்தார்.

”அதில் ஒன்று சிறுபான்மையினருக்கான ஆணையத்தை உருவாக்குவது. அப்போதுதான் சம உரிமையை வழங்க அந்த ஆணையம் இன்னும் முயற்சிகள் எடுக்கும், இப்போது சம உரிமம் இல்லை என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், அதனை செயல்படுத்த ஒரு அமைப்பு இருந்தால் சரியாக செயல்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்”, என்றார் அவர்.

இன்று பெர்னாமா தொலைக்காட்சிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் பிரபாகரன் அத்தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார்.

Source : Bernama

#PPrabakaran
#MITRA
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.