தேர்ந்தெடுக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் உச்ச நேரத்தில் கனரக வாகனங்கள் நுழைவதற்குத் தடை

தேர்ந்தெடுக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் உச்ச நேரத்தில் கனரக வாகனங்கள் நுழைவதற்குத் தடை

கோலாலம்பூர், 07/02/2025 : பிப்ரவரி 19-ஆம் தேதி தொடங்கி கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதிலும், சில நெடுஞ்சாலைகளில் உச்ச நேரத்தில் கனரக வாகனங்கள் நுழைவதற்கான தடையை மலேசிய நெடுஞ்சாலை வாரியம், எல்.எல்.எம் விரிவுப்படுத்துகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அந்நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தைச் சுமூகமாக்கும் நோக்கத்தில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக எல்.எல்.எம் தலைமை இயக்குநர் டத்தோ சஸாலி ஹருன், இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை, LUS, கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய நெடுஞ்சாலை, என்.கே.வி.இ, ELITE நெடுஞ்சாலை, டுத்தா-உலு கிள்ளான் நெடுஞ்சாலை, டுக் ஆகியவற்றில் அந்த தடை அமல்படுத்தப்படும் என்று டத்தோ சஸாலி தெரிவித்தார்.

சாலை பாதுகாப்பு மற்றும் நெரிசல் குறித்த அமைச்சரவைச் செயற்குழுவின் கீழ், 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதி இந்தத் தடை அமலாக்கம் அரசாங்கப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

துப்புறவு பணிகள், அப்புறப்படுத்துவது, உள்நாட்டு கழிவை அனுப்புவது, அவசர சேவை மற்றும் அமலாக்கம், நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளில் பயன்படுத்தப்படும் கனரக வாகனங்கள் ஆகியவை இந்தத் தடையில் உட்படுத்தப்படாது.

இந்நடவடிக்கை திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 6.30 தொடங்கி 9.30 மணி வரையிலும் மாலை 4.30 தொடங்கி இரவு 7.30 மணி வரையிலும் அமலில் இருக்கும்.

Source : Bernama

#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia