கோலாலம்பூர், 8 ஆகஸ்டு- மலேசிய விமானப் போக்குவரத்து நிறுவனமான MAS இன்று பங்குச் சந்தையிலிருந்து தற்காலிகமாக விலகியது.
ஓர் முக்கிய அறிவிப்புக்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ள எம்.ஏ.எஸ் நிறுவனம் மேலதிக தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. ஆனால், மலேசிய ஏர்லைன்ஸின் 69 விழுக்காட்டு பங்குகளைக் கொண்டிருக்கும் கஸானா நெஷனல் பெர்ஹாட், அந்நிறுவனத்தை பொது நிறுவன பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு தனியார் நிறுவனமாக்க முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த மூன்றாண்டுகளாகத் தொடர் நஷ்டத்தைப் பதிவு செய்துள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை மறு சீரமைப்பு செய்வதற்கான நடவடிக்கையின் ஒரு கட்டமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் நஷ்டத்தில் போய்க்கொண்டிருந்த நேரத்தில் இவ்வாண்டு அவ்விமான நிறுவனத்திற்கு பேரிடியாய் அமைந்தது கடந்த மார்ச் 8-ஆம் தேதி காணாமல் போன MH370 விமானமும், ஜூலை 17-ஆம் தேதி உக்ரைன் எல்லையில் சுட்டுவீழ்த்தப்பட்ட MH17 விமான விபத்தும். இவ்விரு கோர சம்பவங்களும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் நிலைமையை மேலும் மோசமாக்கியதைத் தொடர்ந்து, கஸானா நெஷனல் பெர்ஹாட் அதனை மறு சீரமைக்கும் நடவடிக்கையில் துரிதமாக இறங்கியுள்ளது.