கோலாலம்பூர், ஆகஸ்டு 8- கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் தடுப்புக் காவலில் மரணமுற்ற அ.குகனின் மரணத்திற்கு டான் ஶ்ரீ காலிட் அபு பாக்காரும் அவர் தலைமையிலான காவல்த்துறை அதிகாரிகளும் தான் காரணம் என தீர்ப்பளித்த நீதிமன்றம்.
இன்று மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பை வாசித்த நீதிபதி டத்தோ வாங் டாக் வாஹ் தனது தடுப்புக் காவல் மரணங்கள் ஒருபோதும் இந்நாட்டில் நிகழக்கூடாது என்றும், இவ்விவகாரத்தைச் சகித்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில் தனிநபர் மற்றும் பொது விசாரணைக்கு முக்கியத்துவம் அளித்து மரணமடைந்தவரின் குடும்ப உறுப்பினர்களின் உரிமைக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ வி.தி சிங்கம் திரட்டிய ஆதாரங்களை மேற்கோள்காட்டி அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குகன் மரண விவகாரத்தில் அவரது குடும்பத்தின் நீதியை நிலைநாட்ட இறுதி வரை போராட வேண்டியிருந்ததை டத்தோ வோங் சுட்டிக் காட்டினார்.
தடுப்புக் காவலில் நிகழும் மரணங்களைக் கண்காணிக்க தனிப்பட்ட அமைப்புகள் ஏதும் இல்லாததால், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நீதிமன்றங்கள் தான் முனைப்பாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தம் மகன் குகனின் தடுப்புக் காவல் மரணத்தை எதிர்த்து அவரது தாய் இந்திரா சிலாங்கூர் மாநில போலீஸ் படைத் தலைவராக இருந்த காலிட், முன்னாள் கான்ஸ்டபிள் வி.நவீந்திரன், சுபாங் முன்னாள் ஒசிபிடி அசிஸ்டன்ட் கமிஷனர் சைனால் ரஷிட் அபு பாக்கார், போலீஸ் ஐ.ஜி.பி மற்றும் அரசாங்கத்தின் மீது 100 மில்லியன் ரிங்கிட் நஷ்ட ஈடுகோரி வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்புக் காவலில் இருந்தபோது தனது மகனின் பாதுகாப்பு, உடல்நலனை சம்பந்தப்பட்டவர்கள் கருத்திக் கொள்ளவில்லை என இந்தியா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 2009-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி 22 வயது குகன், போலீசாரால் கைதாணை பெறுவதற்கு முன்பே கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பின்னர் தைப்பான், USJ சுபாங் ஜெயா காவல்நிலையத்திற்கு விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்ட அவர் ஜனவரி 20-ஆம் தேதி மரணமடைந்தார்.