40 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள திட்டத்தை வழங்குவதில் மோசடி: விசாரணையின் முடிவுகள் அடுத்த வாரம் நிறைவு

40 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள திட்டத்தை வழங்குவதில் மோசடி: விசாரணையின் முடிவுகள் அடுத்த வாரம் நிறைவு

புத்ராஜெயா, 01/02/2025 : 40 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள ஒரு திட்டத்தை வழங்குவதில் கோலாலம்பூர் மாநகர கழகம், (டி.பி.கே.எல்)-இன் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஒருவர் அதிகார மீறல் செய்ததாக மேற்கொள்ளப்படும் விசாரணையின் முடிவுகள் அடுத்த வாரம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டரசு பிரதேசத்தின் நேர்மையை பாதிக்கும் எந்தவொரு தவறான நடவடிக்கைகளையும் தமது தரப்பு சமரசம் செய்துக் கொள்ளாது என்று கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தாபா தெரிவித்தார்.

”எங்கள் துறையின் கீழ் உள்ள நிறுவனங்களை நாங்கள் தணிக்கை செய்கிறோம். சரியானதை நாங்கள் செய்ய வேண்டும். எனவே விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. விசாரணையின் முடிவுகளுக்காக நான் காத்திருக்கிறேன். குற்றம் இல்லையென்றால், அங்கே எந்த பிரச்சனையும் இருக்காது. நான் ஒரு காலக்கெடுவை வழங்கவில்லை, ஆனால் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். குறிப்பாக அடுத்த வாரம் டத்தோ பண்டாரிடமிருந்து ஒரு அறிக்கையைப் பெறுவேன் என்று நினைக்கிறேன்,” என்றார் அவர்.

சனிக்கிழமை, புத்ராஜெயாவில் நடைபெற்ற நகர்ப்புற திறந்தவெளி விவசாய தினத்தை தொடக்கி வைத்த பின்னர், டாக்டர் சலிஹா அவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக, டி.பி.கே.எல்-இன் நெறிமுறை பிரிவுடன் இணைந்து அக்கழகம் உள் விசாரணையைத் தொடங்கியுள்ளதை, கோலாலம்பூர் டத்தோ பண்டார் டத்தோ ஶ்ரீ மைமுனா முஹ்மட் ஷாரிப் ஜனவரி 28-ஆம் தேதி உறுதிப்படுத்தியிருந்தார்.

திறந்த குத்தகை வழி மேற்கொள்ளப்படாமல், டி.பி.கே.எல்-க்கு 40 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள ஒரு திட்டத்தை வழங்குவதில் நிர்வாக செயல்முறை மீறப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

Source : Bernama

#DBKL
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.