நிதி மோசடி செய்ததாக நிறுவன இயக்குநர் மீது 5 குற்றப்பதிவுகள்

நிதி மோசடி செய்ததாக நிறுவன இயக்குநர் மீது 5 குற்றப்பதிவுகள்

தைப்பிங், 24/01/2025 : 2020-இல் இருந்து 2024-ஆம் ஆண்டிற்கு இடையில், உரிமம் பெற்ற கடனளிப்பு நிறுவனம் ஒன்றின் இயக்குநர் ஒருவர், அந்நிறுவனத்தின் 551,130 ரிங்கிட் நிதியை மோசடி செய்ததாக, இன்று, பேராக், செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார்.

நீதிபதி நபிஷா இப்ராஹிம் முன்னிலையில் வாசிக்கப்பட்ட அந்த ஐந்து குற்றச்சாட்டுகளையும், குற்றம் சாட்டப்பட்ட 52 வயதுடைய Simon என்றழைக்கப்படும் டத்தோ லீ ஹையன் சிப் மறுத்து விசாரணைக் கோரினார்.

Pasti Tunai Jaya நிறுவனத்தின் 168,220 ரிங்கிட் நிதியை Maju Bosku நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு காசோலை மூலம் செலுத்தியதாக அவ்வாடவர் மீது முதல் குற்றம் பதிவாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து, 168,420 ரிங்கிட் மற்றும் 49,240 ரிங்கிட்டை தமது சொந்த வங்கிக் கணக்குக்கு மாற்றியதாகவும், 72,180 ரிங்கிட்டை Aneka Mega நிறுவன வங்கி கணக்கிற்கும், 93,070 ரிங்கிட்டை Low Sher Huey எனும் பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கும் அனுப்பியுள்ளதாக அடுத்தடுத்த குற்றங்கள் பதிவாகியுள்ளன.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 403-இன் கீழ் அந்த அனைத்து குற்றச்சாட்டுகளும் பதிவாகியுள்ளன.

Pasti Tunai Jaya நிறுவனத்தின் முகவராக, அதாவது அந்நிறுவனத்தின் இயக்குநர் என்ற முறையில் அதன் சொத்துக்களைக் நிர்வகிக்கும் பொறுப்பு Lee-இடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மீது நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டும் இதற்கு முன்னர் சுமத்தப்பட்டிருந்தது.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 10,000 ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிநபர் ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் லீ விடுவிக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Source : Bernama

#Taiping
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.