கோலாலம்பூர், 21/01/2025 : சீனப் புத்தாண்டை முன்னிட்டு, அடுத்த வாரம் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில், கிரேத்தாப்பி தானா மலாயு நிறுவனம், கேதிஎம்பி, ‘Excursion’ எனப்படும் சிறப்பு ரயில் சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது.
792 டிக்கெட்டுகளுடன், கேஎல் சென்ட்ரல் மற்றும் பினாங்கு, பட்டர்வர்த் ஆகிய இரண்டு நிலையங்களை இணைக்கும் இருவழி சிறப்பு இரயில் சேவையை தங்கள் தரப்பு ஏற்பாடு செய்துள்ளதாக, ஊடக அறிக்கையின் மூலம் கேதிஎம்பி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராணி ஹிஷாம் தெரிவித்தார்.
இன்று காலை 10 மணி தொடங்கி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், பயணத்திற்கான ஒருவழி கட்டணமாக, உயர் வகுப்பு இருக்கைகளுக்கு 60 ரிங்கிட் மற்றும் சொகுசு வகுப்பு இருக்கைகளுக்கு 90 ரிங்கிட் என வசூலிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புஃபே ரயில் பெட்டி மற்றும் சில்லாக்ஸ் ரயில் பெட்டிகள் மூலம், பயணிகள் தனித்துவமான அனுபவத்தை அனுபவிக்கும் அதே வேளையில் மகிழ்ச்சியான பயணம் மேற்கொள்வதை உறுதி செய்ய இது ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் நீண்ட பள்ளி விடுமுறையை முன்னிட்டு வடக்கு நோக்கி பயணிக்கும் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த சிறப்பு ரயில் சேவையைப் போக்குவரத்து அமைச்சின் மூலம் கேதிஎம்பி அறிமுகப்படுத்தியுள்ளது.
கேஎல் சென்ட்ரல் நிலையத்திலிருந்து பினாங்கு, பட்டர்வர்த்தை நோக்கி பயணிக்கும் சிறப்பு இரயில், தஞ்சோங் மாலிம், கம்பார், பத்து காஜா, ஈப்போ, கோலா கங்சார், தைப்பிங் மற்றும் புக்கிட் மெர்தாஜாம் ஆகிய நிலையங்களில் நிற்கும் என்று கேதிஎம்பி தெரிவித்தது.
எனவே, பயனர்கள், தங்களுக்கான டிக்கெட்டுகளை, கேதிஎம்பியின் செயலி, இயந்திரம், முகப்புகள் மற்றும் அதிகாரப்பூர்வ அகப்பகத்திலிருந்து வாங்கிக் கொள்ளலாம்.
Source : Bernama
#ChineseNewYear2025
#TrainServices
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.