மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கவே பணி சுழற்சி முறை

மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கவே பணி சுழற்சி முறை

புத்ராஜெயா, 21/01/2025 : மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கும் உள்துறை அமைச்சின் இலக்குடன் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, சேவை முகப்புகளில் பணிபுரியும் அரசாங்க ஊழியர்களுக்குப் பணி சுழற்சியைச் செயல்படுத்தும் நடவடிக்கை அமைந்துள்ளது.

உள்துறை அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் குறிப்பாக குடிநுழைவுத் துறை, தேசிய பதிவுத் துறை மற்றும் போலீஸ் படை போன்ற முகப்பு சேவையை உள்ளடக்கிய பல நிறுவனங்களில் இந்த அணுகுமுறை பயன்படுத்தப்படும் என்று அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

தெளிவான குறிக்கோள்களுடன் செயல்படும் அமைப்பின் அடிப்படையில் பொது சேவை செயல்படுவதாகவும், பணி சுழற்சியை அமல்படுத்தும் நடவடிக்கை நேர்மை தொடர்பாக எழும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்து, அரசாங்க சேவை தரத்தில் மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

”அரசாங்க தலைமைச் செயலாளரின் கருத்துக்களை நான் வரவேற்கிறேன். காரணம் கே.டி.என் (அமைச்சு) கீழ் செயல்படும் நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்தத் தொடர்ச்சியான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கிறோம். மக்களின் நலன்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை நான் எப்போதும் நினைவூட்டுகிறேன். அது மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும். நாம் அதைச் (பணி சுழற்சி முறை) செயல்படுத்த முடிந்தால், இதன் நிறைவில் மாற்றத்தை உணர முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், ” என்றார் அவர்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற ஆசிய அனைத்துலக பாதுகாப்பு உச்சநிலை மாநாடு மற்றும் கண்காட்சியில் கலந்து கொண்ட பின்னர் சைஃபுடின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அரசாங்க தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் முன்வைத்துள்ள அந்த பரிந்துரை, அரசாங்க ஊழியர்களுக்கு மிகவும் உகந்த பணிச்சூழலை உருவாக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளதாக அவர் விளக்கினார்.

Source : Bernama

#AISSE25
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.