பொதுமக்களின் கைப்பேசிகளைப் போலீசார் சோதனை செய்யும் விவகாரம்; சுஹாகாமைச் சந்திக்கிறார் ரசாருடின்

பொதுமக்களின் கைப்பேசிகளைப் போலீசார் சோதனை செய்யும் விவகாரம்; சுஹாகாமைச் சந்திக்கிறார் ரசாருடின்

புத்ராஜெயா, 19/01/2025 : பொதுமக்களின் கைப்பேசிகளைப் போலீசார் சோதனை செய்யும் விவகாரம் குறித்து விளக்கம் அளிப்பதற்கு சுஹாகாம் எனப்படும் மனித உரிமை ஆணையத்தை தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருடின் ஹுசைன் சந்திக்கவுள்ளார்.

போலீசார் அச்சோதனையை மேற்கொள்ள அனுமதிக்கும் பணியின் நோக்கத்தைச் சுஹாகாம் அறிந்து கொள்வதற்கு அவ்வாறு செய்யுமாறு தேசிய போலீஸ் படைத் தலைவரைத் தாம் கேட்டுக் கொண்டதாக உள்துறை அமைச்சர்  டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறியிருக்கிறார்.

மனித உரிமை மீறலாகக் கருதப்படுவதால் சாலை தடுப்பு நடவடிக்கையின் போது ஒருவரின் கைத்தொலைப்பேசியை தங்களின் விருப்பத்திற்கேற்ப போலீசார் சோதனையிட முடியாது என்று சுஹாகாம் அறிக்கை வெளியிட்டது தொடர்பில் கேள்வி எழுப்பிய போது  டத்தோ ஶ்ரீ சைஃபுடின் இவ்வாறு தெரிவித்தார்.

குற்றவியல் நடைமுறை சட்டம் செக்‌ஷன் 23 உட்பிரிவு (1) மற்றும் 116 B, 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம், போலீஸ் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரின் கைப்பேசியைச் சோதனையிட போலீசிற்கு அதிகாரம் இருப்பதாக கடந்த வாரம் டான் ஸ்ரீ ரசாருடின் ஹுசைன் கூறியிருந்தார்.

இன்று, புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் 2025ஆம் ஆண்டுக்கான ஆசிய அனைத்துலக பாதுகாப்பு உச்சநிலை மாநாடு மற்றும் கண்காட்சி, AISSEஇன் தயார்நிலை பணிகளை பார்வையிட்டப் பின்னர் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே, அண்மையக் காலமாக அதிகரித்து வரும், மியன்மாரில் இருந்து வரும் ரோஹிங்கியா அகதிகளின் வருகையைக் கட்டுப்படுத்த மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனமான எபிஎம்எம் எப்போதும் தயாராக இருப்பதாக  டத்தோ ஶ்ரீ சைஃபுடின் தெரிவித்துள்ளார்.

ஆசியான் அளவில் மியன்மார் அகதிகளின் விவகாரம் விவாதிக்கப்பட்டதாக சைஃபுடின் விளக்கினார்.

#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.