புக்கிட் ஜாலில், 11/01/2025 : இந்தோனேசியா பூப்பந்தரங்கின் ஜாம்பவான் ஹெர்ரி இமான் பியர்ங்காடி (HERRY IMAN PIERNGADI) மலேசிய ஆடவர் இரட்டையருக்கான தலைமை பயிற்றுநராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நான்கு ஆண்டுக் கால ஒப்பந்தத்தில், பிப்ரவரி முதலாம் தேதி தொடங்கி ஹெர்ரி தமது பணியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவார் என்று மலேசிய பூப்பந்து சங்கம், பி.ஏ.எம். இடைக்கால தலைவர் டத்தோ வி. சுப்ரமணியம் கூறினார்.
தலைமை பயிற்றுநர் பொறுப்புக்கு முன்னதாக நால்வர் முன்மொழியப்பட்ட வேளையில், ஹெர்ரியின் தேர்வை பி.ஏ.எம். உறுதி செய்து, இன்று அறிவித்தது.
“ஒரு புதிய பயிற்றுநர் வேறொரு நாட்டிற்கு வரும்போது, முதலில் அவர் தனக்குக் கீழ் இருக்கும் அனைத்து ஆட்டக்காரர்களையும் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு வீரரின் பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதோடு, அவருக்குக் கீழ் பணிபுரியும் இதர பயிற்றுநர்களையும் அறிந்து கொள்ள வேண்டும். அதற்காக அவருக்கு 10 நாள்கள் அவகாசம் தேவைப்படும் என்று நினைக்கிறேன். அப்போதுதான் அவர் தமது திட்டமிடலை வெளிக்கொணர முடியும்,” என்று அவர் கூறினார்.
இன்று புக்கிட் ஜாலில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், சுப்ரமணியம் அவ்வாறு கூறினார்.
ஹாங்காங் பூப்பந்து அணியில் இணைவதற்காக தமது பதவியை விட்டு விலகிய பின் ஷென்னுக்குப் பதிலாக தற்போது ஹெர்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
Source : Bernama
#HerryIman
#BadmintonMensDoubles
#HeadCoach
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia