கோலாலம்பூர், 10/01/2025 : இந்தியா புபனேஸ்வரில் நடைபெற்ற 18-வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் மலேசியா-இந்தியா டிஜிட்டல் கவுன்சில்(மன்றம்) – (MIDC) அதிகாரப்பூர்வ தொடக்கம் கண்டது.
நமது நாட்டின் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு இடையேயான அதிகாரப்பூர்வ சந்திப்பைத் தொடர்ந்து இந்தத் திட்டம் தொடக்கம் கண்டது.
அமையப்பெற்றிருக்கும் MIDC மன்றமானது டிஜிட்டல் வர்த்தகம், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் துறைசார் வல்லுனர்களின் பரிமாற்றம் என, இருநாட்டு இலக்கவியல் துறையை இயக்கத் தயாராக உள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த முக்கிய முயற்சி மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவில் குறிப்பிடத்தக்க முனேற்றத்தைப் பிரதிபலிக்கிறது. பண்பாட்டு கலாச்சார விழுமியங்களை வலுப்படுத்தும் அதே நேரத்தில், இரு நாடுகளின் இலக்கவியல் புத்தாக்கம், துறைசார் திறன் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை இம்மன்றம் மேலும் விரிவுபடுத்துகிறது என தமதறிக்கையில் அமைச்சர் கோபிந்த் பதிவு செய்தார்.
இரு நாட்டுக்கும் இடையேயான இலக்கவியல் வளர்ச்சி, திறன் மேம்பாடு, இலக்கவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு வலுவூட்டும் முக்கியத் தளமாக MIDC மன்றம் விளங்கும் அதே வேளை, இதனைச் செயல்படுத்துவதற்கான சூழலை இலக்கவியல் அமைச்சு ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தும் என கோபிந் சிங் தெரிவித்தார். MIDC எனப்படும் மலேசியா இந்தியா இலக்கவியல் மன்றம் கீழ்கண்டவாறு செயல்படும்:
i. துறைசார் வல்லுனர்களின் அனுபவப் பகிர்வும், இலக்கவியல் தொழில்நுட்ப நிபுணத்துவத்தின் பரிமாற்றமும் நுண்ணோக்கப்படும்
ii. இலக்கவியல் தொழில்நுட்பங்கள் தொடர்பான கொள்கை மற்றும் அணுகுமுறைகளைச் சீர்செய்யும்
iii. தொழிற்சங்கங்களுக்கு இடையேயான இணக்கத்தை வலுப்படுத்துவதோடு, அவற்றுக்கிடையேயான வணிக கூட்டாண்மை ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராயும்
iv. புதிய, சிறு, குறு, நடுத்தர வணிக நிறுவங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தும் முயற்சிகளை முன்னெடுக்கும்
v. மக்கள் இலக்கவியல் துறையில் புதிய திறன்களை கற்றுக் கொள்ளவும், இருக்கும் திறனை மேம்படுத்திக்கொள்ளவும் வழிவகுக்கும்
அதோடு இந்த மன்றம், இரு நாடுகளுக்கும் இடையே கணினி அவசரகால பதிலளிப்பு குழுக்களுக்கு-(Computer Emergency Response Teams CERTs) இணைய பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும். அதே வேளை 5G தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டங்களில் ஒத்துழைக்கவும், 5G தொழில்நுட்பம் தொடர்பான வாய்ப்புகளை ஆராயவும் இந்த மன்றம் செயல்படும்.
MIDC-யின் தொடக்க கூட்டம் இந்த ஆண்டின் முதல் பாதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவிற்கு அலுவல் பயணம் போது மேற்கொண்ட போது கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடைப்படையாகும். அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) கீழ் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை வலுப்படுத்தும் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களுக்கான அடித்தளத்தை MIDC முன்னெடுக்கும்.
இந்தியாவில் தனது அதிகாரப்பூர்வ பயணத்தின் போது, அமைச்சர் கோபிந்த் சிங், இந்திய வெளியுறவு விவகாரங்களுக்கான அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் Digital India Foundation மற்றும் Open Network for Digital Commerce (ONDC) ஆகியவற்றின் பிரதிநிதிகளைச் சந்தித்தார்.
#GobindSinghDeo
#MIDC
#18thPravasiBharathiDivas
#MalaysiaIndia
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia