நஜிப் சமர்ப்பித்த மேல்முறையீட்டு மனு நாளை திங்கட்கிழமை விசாரிக்கப்படும்

நஜிப் சமர்ப்பித்த மேல்முறையீட்டு மனு நாளை திங்கட்கிழமை விசாரிக்கப்படும்

கோலாலம்பூர், 05 /01/2025 : முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் எஞ்சிய 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் கழிப்பதற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் சமர்ப்பித்த மேல்முறையீட்டு மனுவை, மேல்முறையீட்டு நீதிமன்றம் நாளை விசாரிக்கும்.

இதற்கு முன்னர் கடந்தாண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்த அதன் செவிமடுப்பு, டத்தோ அசிசா நவாவி, அசஹாரி கமால் ரம்லி மற்றும் டத்தோ ஶ்ரீ முஹ்மட் ஃபிரூஸ் ஜஃப்ரால் ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவின் முன், நாளை காலை மணி ஒன்பதுக்கு தொடங்கும்.

அரச மன்னிப்பு ஆணை தொடர்பாக, நஜிப் சமர்ப்பிக்கவிருக்கும் கூடுதல் ஆதாரங்களும் நாளை செவிமடுக்கப்படும்.

கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பிக்கவிருப்பதாக, கடந்தாண்டு டிசம்பர் மூன்றாம் தேதி நஜிப்பின் வழக்கறிஞர் Tan Sri Muhammad Shafee Abdullah அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த மேல்முறையீட்டு மனுவின் செவிமடுப்பு ஜனவரி ஆறாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அரச மன்னிப்பு ஆணையை நீதிமன்றம் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று நஜிப் செய்த விண்ணப்பத்தை, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து, 71 வயதான நஜிப் கடந்தாண்டு ஜூலை மூன்றாம் தேதி மேல்முறையீடு செய்தார்.

தமது எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அரச மன்னிப்பு ஆணை அனுமதிப்பதாக நஜிப் கூறி வருகிறார்.

2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி தொடங்கி, நஜிப் காஜாங் சிறைச்சாலையில் தமது சிறைத் தண்டணையை அனுபவித்து வருகிறார்.

Source : Bernama

#Najib
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.