ஜாஜ்டவுன், 05/01/2025 : GOTO எனப்படும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் 11ஆவது மாநாட்டின் வழி, இந்தியாவுடனான குறிப்பாக தமிழ்நாடு உடனான பொருளாதாரம், முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த முடியும் என்று பினாங்கு மாநிலம் நம்புகிறது.
வழக்கமாக தமிழ்நாட்டில் நடைபெறும் இம்மாநாடு, முதல் முறையாக பினாங்கில் நடத்தப்படும் நிலையில், இதனை மாநிலத்திற்கு கிடைத்த சிறந்த அங்கீகாரமாக கருதுவதாக பினாங்கு முதலமைச்சர் சோவ் கொன் இயோவ் தெரிவித்திருக்கின்றார்.
”முன்னதாக, பினாங்கு மற்றும் தமிழ்நாட்டு தலைவர்களுக்கும் மக்களுக்குமான உறவு நீண்ட காலமாக இருந்திருக்கலாம். ஒரு காலத்தில், பினாங்கில் இருந்து சென்னை, மெட்ராஸ் நோக்கிச் செல்லும் ஒரு கப்பல் இருந்தது,” என்றார் அவர்.
சனிக்கிழமை, ஶ்ரீ பினாங்கு மண்டபத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் 11ஆவது மாநாட்டை தொடக்கி வைத்தப் பின்னர், சோவ் கொன் இயோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
GOTO-வின் முயற்சியில் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் இம்மாநாடு, புவியியல் மற்றும் கருத்தியல் அடிப்படையில் இரு நாடுகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, பினாங்கு மாநில அரசாங்கத்தின் அனுமதி மற்றும் ஆதரவுடன் இந்த மாநாட்டை வெற்றி கரமாக நடத்த முடிந்ததாக பினாங்கு மாநிலத்தின் வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ எஸ்.சுந்தரராஜூ தெரிவித்துள்ளார்.
”பினாங்கு மாநிலத்தில் தமிழர்களின் சரித்திரம் அதிகம் இருப்பதால் இங்கு நடத்த வேண்டும் என்று முடிவு செய்தேன். முதலமைச்சரிடம் அனுமதி கேட்டேன். அனைத்தையும் செய்யுங்கள் நான் முழு ஆதரவு தருகிறேன் என்றார். இன்று வெற்றிகரமாக மாநாடு நடந்துக் கொண்டிருக்கின்றது. மகிழ்ச்சியாக உள்ளது. கெடா மாநிலம் தொடங்கி ஜோகூர் மாநிலம் வரை சேர்ந்தவர்கள் மாநாட்டிற்கு வந்துள்ளனர். மாநாடு சிறப்பாக நடைபெற்றால், மீண்டும் அடுத்த ஆண்டும் இங்கு நடத்த ஆதரவு அளிக்கிறேன் என்று முதலமைச்சர் கூறினார்,” என்றார் சுந்தரராஜூ.
கத்தாரில் நடைபெற்ற ஆசிய பொது சிலம்ப வெற்றியாளர் போட்டியில் மகுடம் சூடிய மலேசிய சிலம்ப விளையாட்டாளர்களுக்கு தலா ஆயிரம் ரிங்கிட்டும் சான்றிதழும் வழங்கியதாக சுந்தரராஜூ கூறினார்.
இதனைத் தொடர்ந்து, வர்த்தகம், கல்வி, கலாச்சாரம் போன்ற துறைகளுக்கு இந்த மாநாடு சிறந்த பயனை அளிக்கும் என்று மேலவை உறுப்பினர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் அருணாச்சலம் தெரிவித்திருக்கின்றார்.
”சுமார் 500 பேர் இதில் பேர் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாடு ஒரு நல்ல களம். வர்த்தகம், கல்வி, கலாச்சாரம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டும் இந்த மாநாடு மலேசியாவில் நடைபெற்ற வேண்டும் என்று நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்றார் அவர்.
ஜனவரி நான்காம் மற்றும் ஜனவரி ஐந்தாம் தேதிகளில் நடைபெற்ற இந்த இரண்டு நாள் மாநாட்டில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல தலைவர்களும் கலந்து கொண்டனர்.
Source : Bernama
#GOTOMeet
#Penang
#TamilNadu
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.