தமிழ்ப்பள்ளிகளின் தேசிய நிலை தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியை இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்தார். காலத்திற்கேற்ற முயற்சி- அமைச்சர் புகழாரம்.

தமிழ்ப்பள்ளிகளின் தேசிய நிலை தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியை இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்தார். காலத்திற்கேற்ற முயற்சி- அமைச்சர் புகழாரம்.

சைபர் ஜெயா, 04/01/2025 : தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய நிலை தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டி, இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ தலைமையில் இன்று நடைபெற்றது. நாடளாவிய நிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் மானியம் வழங்குவதாகத் தெரிவித்தார்.

இந்தப் போட்டி மல்டிமீடியா பல்கலைக்கழகத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மல்டிமீடியா பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் மஸ்லிஸாம் சா உட், சன்வே பல்கலைக்கழக இணைவேந்தர் பேராசிரியர் முனைவர் மகேந்திரன் நாயர் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இது ஒரு சிறந்த திட்டம் எனவும், இது போன்ற திட்டங்களுக்கு தாம் முழு ஆதரவு தருவதாகவும் இலக்கவியல் அமைச்சர் கூறினார். அதே வேளையில், நமது சமுதாயம், தகவல் தொழில்நுட்ப மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப தயார்படுத்திக் கொள்வது அவசியம் என தெரிவித்தார். இந்தத் திட்டம் காலத்திற்கேற்ற திட்டம் என புகழாரம் சூட்டினார் இலக்கவியல் அமைச்சர்.

மல்டிமீடியா பல்கலைக்கழகம், கோலகிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், தமிழ் டெக்.மை(tamiltech.my), மலேசிய தலைமையாசிரியர் மன்றம் ஆகிய அமைப்புகள் இந்த முன்னெடுப்பில் இணைந்து செயல்பட்டன.

உலகமே நமது கைகளில். அதனை விவேகமாகப் பயன்படுத்த வேண்டும். அசுர வேகத்தில் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்திற்கு நாம் ஈடு கொடுக்க வேண்டும். குறிப்பாக மாணவர்கள் தகவல் தொழில் நுட்பப் பயன்பாடுகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மேலும் கூறினார்.

கடந்த 15 வருடங்களாக தமிழ்ப்பள்ளிகளில் தகவல் தொடர்பு தொழில் நுட்ப சிறப்பு வகுப்புகளை திதியன் டிஜிட்டல் திட்டம் முன்னெடுத்து வருகிறது.

நாடளாவிய ரீதியில் இவ்வருடம் ஈராயிரத்திற்கும் அதிகமான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கு பெற்றனர். இவர்களுள் 240 மாணவர்கள் தேசிய ரீதியிலான போட்டிக்குத் தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் பரிசுகளையும் நற்சான்றிதழ்களையும் வழங்கினார். முதல் மூன்று இடம் வகித்த மாணவர்களுக்கு தட்டை கணினி வழங்கப்பட்டது.

ஒவ்வொரு பள்ளியிலும், இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். இது இடைநிலைப்பள்ளியில் தடங்கலின்றி கற்க வழிவகுக்கும். இதன் வழி நமது மாணவர்கள் 4-ஆம் தொழில்புரட்சி சவால்களை எதிர்கொள்ள ஏதுவாக இருக்கும் என நிகழச்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு குணசேகரன் கந்தசுவாமி தெரிவித்தார். கடந்த 15 ஆண்டுகளாக இந்தத் திட்டம் தடையின்றி செயல்பட தமக்கு ஆதரவு வழங்கும் நல்லுள்ளங்களுக்கு குணசேகரன் தனது நன்றியை பதிவு செய்தார்.

#GobindSinghDeo
#DigitalMinistry
#TamilSchoolDigitalContest
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia