கோலாலம்பூர், 31/12/2024 : சில தனிநபர்கள் மீது எதிர்மறையான கருத்துகளைப் பகிரும் நடவடிக்கை அண்மையக் காலமாக அதிகரித்து வருவது குறித்து சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா கவலை தெரிவித்துள்ளார்.
இச்செயலைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், இழிவான வாழ்க்கை கலாச்சாரத்திற்கு வழிவகுத்து சமூகத்தின் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்று அவர் கூறினார்.
பொதுவாகத் தேர்தல் காலங்களில் மட்டுமே தனிநபர்கள் மீது தவறான கருத்துகளைப் பகிரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாலும், தற்போது அச்செயல் நம்பிக்கையைச் சீர்குலைக்கவும் சில நபர்களை மேலும் வீழ்த்தவும் பயன்படுத்தப்படுவதாக சுல்தான் ஷாராஃபுடின் குறிப்பிட்டார்.
இச்செயலினால் பரப்பப்படும் போலிச் செய்திகளை நம்புவதற்கும் முடிவு செய்வதற்கும் முன்பு, மக்கள் மதிப்பீடு செய்வதில் திறமையாகச் செயல்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
மதம், இனம் மற்றும் அரசியல் நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாமல் பொருளாதார வளர்ச்சிக்கும், அனைத்து துறைகளில் நாட்டை முன்னேற்றுவதற்குக் கடினமாக உழைப்பதற்கும் மக்கள் உறுதிக் கொள்ள வேண்டும் என்று 2025 புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்து செய்தியில் சுல்தான் ஷாராஃபுடின் கேட்டுக் கொண்டார்.
தலைவர்கள் மற்றும் வணிக சமூகத்தினரிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு, ஆடம்பரத்திற்கு பேராசை கொள்ளும் அரசாங்க ஊழியர்களின் நடவடிக்கை ஆகியவை சமூக ஊடகங்களில் அவதூறுகள் மற்றும் போலி செய்திகளைப் பகிர வித்திடுகின்றன.
ஆகவே, இது போன்ற செயல்களைக் குறிப்பிட்ட தரப்பினர் தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
Source : Bernama
#SelangorSultan
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia