அதிகமாக மன அழுத்தம் ஏற்படுவதற்கு வேலையிடங்களும் முக்கிய காரணம்

அதிகமாக மன அழுத்தம் ஏற்படுவதற்கு வேலையிடங்களும் முக்கிய காரணம்

கோலாலம்பூர், 10/10/2024 : ஒரு சராசரி மனிதர் தமது வாழ்க்கையின் பெரும்பாலான பகுதியை பணியிடங்களிலேயே கழிக்கின்றனர்.

அதிலும், 60 விழுக்காட்டு மலேசியர்கள் ஓய்வு வயதைக் கடந்தும் தொடர்ந்து வேலை செய்வதாக அண்மையில் மேற்கொண்ட ஆய்வொன்று கூறுகிறது.

இந்நிலையில், இந்நாட்டில் அதிகமாக மன அழுத்தம் ஏற்படுவதற்கு வேலையிடங்களும் முக்கிய காரணம் என்று கூறுகிறார் சிரம்பான் துவாங்கு ஜஃபார் மருத்துவமனையின் மனநல மருத்துவரான டாக்டர் நவின்குமார் ஜீவன்.

மலேசியா மட்டுமின்றி பல உலக நாடுகளிலும் இதே நிலைமை நிலவுவதால், பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான பணிச் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு…

‘பணியிடங்களில் மனநல ஆரோக்கியம்’ என்ற கருபொருளில், உலக மனநல தினத்தை இன்று உலக சுகாதார நிறுவனம் WHO அனுசரிப்பதாக டாக்டர் நவின்குமார் கூறினார்.

பணியிடங்களில் மன அழுத்தம் ஏற்படுவதற்கு சுற்றுப் புறச் சூழல் காரணமாக இருந்தாலும், சில சமயங்களில் உளவியல் காரணங்களும் அதில் அடங்குவதாக அவர் விவரித்தார்.

”வேலையிடங்களில் அதிகமான இரைச்சல், வெப்பமான சூழ்நிலையில் வேலை செய்வது, குறுகிய இடம் ஆகியவை அதிகம் மன அழுத்தத்தை தரவல்லது. உடன் வேலை செய்பவர்கள் நம்மை மதிக்காவிடிலும், கடுமையான முறையில் நடந்து கொண்டாலும், முதலாளி தேவையற்ற அழுத்தத்தைக் கொடுத்தாலும் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது,” என்று அவர் கூறினார்.

இதைத் தவிர்த்து போதிய தூக்கமின்மை, நேரத்தை முறையாக நிர்வகிக்க தவறுவது உட்பட எதிர்மறையான சிந்தனைகளைக் கொண்டிருப்பவர்களும் மன அழுத்தத்தில் அதிகம் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களைப் போன்று மனஅழுத்தத்தையும் குணப்படுத்த முடியாது என்றாலும் அதை கட்டுப்படுத்துவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாகவும் நவின்குமார் குறிப்பிட்டார்.

”ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். குறைந்தது ஆறு முதல் ஏழு மணிநேரம் வரையில் உறங்க வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும். மதுபானம் மற்றும் போதைப்பொருளை உட்கொள்ளவே கூடாது. நேரத்தை முறையாக நிர்வகிக்கப் பழகிக் கொண்டால் மன அழுத்தத்தை முடிந்தவரை கட்டுப்படுத்தலாம். அதைத் தவிர்த்து பிரச்சனைகளை நெருக்கமான நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்,” என்றார் அவர்.

அவ்வாறான நடவடிகைகளில் ஈடுபட்டும் மன அழுத்தம் குறையவில்லை எனில், அருகிலுள்ள சிகிச்சையகத்திற்கோ அல்லது மருத்துவமனைக்கோ சென்று மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம் என்று அவர் அறிவுறுத்தினார்.

அதுமட்டுமின்றி, அரசாங்கத்தின் கீழ் இயங்கும் 15999 என்ற எண்ணில் TALIAN KASIH-வை தொடர்பு கொண்டு, தாங்கள் எதிர்நோக்கும் மனஅழுத்தம் குறித்து ஆலோசனைப் பெறலாம் என்றும் நவின்குமார் தெரிவித்தார்.

Source : Bernama

#TalianKasih
#Depression
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia